மலையக நாட்டாரியலில் புரட்டப்படாதிருந்த சில பக்கங்கள்!
மலையக நாட்டாரியலில்
புரட்டப்படாதிருந்த சில பக்கங்கள்!
மு. சிவலிங்கத்தின் நாட்டுப்புறப்பாடல்
தொகுப்பின் மீதான ஒரு பார்வை
ஒரு மக்கள் கூட்டத்தின் ஆசைகள், அபிலாஷைகள், கனவுகள், கற்பனைகள், துயரங்கள்,
பிரிவுகள், வாழ்க்கைக் கோலங்கள், நம்பிக்கைகள் என்பனவற்றை அப்பழுக்கில்லாது
துல்லியமாக வெளிப்படையாக வெளிக்காட்டும் உணர்வுகளின் தொகுப்பே நாட்டார் பாடல்களாகும்.
ஆழ்ந்த உள்ளத்திலிருந்து பீறிட்டு வெளிக்கிளம்பும் ஒப்பாரி ஒலி, புலம்பல்கள் அதே
போன்றே ஜோடனை இல்லாது வந்து விழும் கேலி, கிண்டல் மொழிகள், ஏன் தூஷணை கலந்த சொற்கள்
சில விரசம் தரும் சொல் எனக் கருதும் சாடல் சொற்கணைகள் நாட்டார் இலக்கிய வடிவத்தின்
பலமும் செழுமையும் ஆகும்.
இந்த வகையில் மலையக நாட்டுப்புறவியல் தொடர்பாக ஆரம்ப காலங்களில் பலர் ஈடுபாடு
கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியான முயற்சியின் அறுவடையே மு. சிவலிங்கத்தின் ‘மலையக
தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்’ தொகுப்பாகும்.
நாமறிந்தவரை மலையக வரலாற்றில் சி. வி. வேலுப்பிள்ளை அவர்களே இத்துறை தொடர்பான ஒரு
முன்னோடி ஆர்வலராகத் தென்படுகின்றார். க. கைலாசபதியின் முன்னுரையுடன் வெளிவந்த சி.
வி.வியின் மலைநாட்டு மக்கள் பாடல்கள் கவனத்தைப் பெற்றது.
நாட்டுப் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் வரலாற்றுச் சான்றுகளாக
மட்டும் அமையவில்லை. அவர்களது கனவுகளின் இலட்சியக் குரலாகவும் விளங்குகின்றன என்று
க. கைலாசபதி குறிப்பிடுகிறார்.
1959 இல் தேயிலைத் தோட்டப் பாடல் என்ற கட்டுரையை தமிழ் நாட்டு மஞ்சரியில் எழுதினார்.
இவை வெறுமனே காதலையும் சாதலையும் சித்தரிக்கும் இதய கீதங்கள் மட்டுமல்ல அங்கு வாழும்
மக்களின் ஜீவிய சரித்திரம் முழுவதையும் விஸ்தரித்துக் காட்டுவன என்கிறார்.
சிவியை போலவே ஏ. வி. பி. கோமஸ், மாத்தளை வடிவேலன், பதுளை பி. வேதாந்த மூர்த்தி,
தங்கவேல், பசறையூர் க. வேலாயுதம், கவிஞர் சு. முரளிதரன், ஸ்டாலின் நவஜோதி இப்படிப்
பலர் நாட்டுப்புறவியல் தொடர்பாக ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இதனை அவர்களது
கட்டுரைகள், நூல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
1979 இல் பதுளை சிந்தனை ஒன்றியம் வெளியிட்டிருந்த ‘சிந்தனைப் பூக்கள்’ மலரில் பி.
வேதாந்த மூர்த்தியின் ‘மலைநாட்டுப் பாடல் சித்திரம்’ என்ற நாட்டுப் புறவியல்
கட்டுரை காணப்படுகிறது. அவரது சில பாடல்கள் பிரசித்தம் பெறாத பாடல்கள் ஆகும். அவரே
நேரடியாக மக்களைக் கண்டு பெற்றவை பல.
இந்த நோக்கில் இன்னும் பலரைக் குறிப்பிட இயலும் இங்கு மு. சிவலிங்கத்தின் முயற்சி
சற்று வேறுபட்டதாக இருப்பதைக் குறிப்பிடல் வேண்டும்.
இது வரை புரட்டப்படாதிருந்த சில பக்கங்களை அவர் ‘பபூன் பாடல்கள்’ மூலம்
வெளிக்கொணர்ந்து உள்ளார். தொடர்ந்து நாடகப் பாடல்கள், வீதிப் பாடல்கள், திருமண
வாழ்த்துப் பாடல்கள் இந்நூலுக்கு மெருகூட்டி உள்ளன.
“அந்தத் தோட்டம் இந்தத் தோட்டம்
பப்பாளித் தோட்டம் - அவன்
படுத்தப் பாய சுருட்டிக் கிட்டு
எடுத்தாண்டி ஓட்டம்...!
இதே போல சிங்கள மக்கள் வாழும் கிராமத்தை ‘நாடு’ என்றழைப்பது மலையகத்தில் ஒரு
வழக்கம். பதுளைப் பிரதேசத்தில் இதனை சிறப்பாகக் காணலாம். அதே போல் அவர்களை
‘பிலாக்கொட்டை’ என்று கிண்டல் செய்வதும் உண்டு. பலாக்காயே அதிகமாக உணவில்
சேர்ப்பதால் அவ்வாறு அழைப்பது போல் அவர்களும் எம்மை இழிவாக கதைப்பதுண்டு.
ஆங்கிலேயர் பெருந்தோட்டங்களில் அரசோச்சிய காலம் பல்லாண்டுகள் ஆதலால் ஆங்கிலம்
பேசுவதை,
‘ஏசு நோசு கம்பளி நோசு’
என்றும்
சிங்களம் பேசுவோரை
‘அரகொட்டை மே கொட்டை
பிலாக் கொட்டை’
என்றும்
நக்கலடிப்பதுண்டு. ஏனைய பல பாடல்கள் பலரரல் தொகுக்கப்பட்டவை எனலாம். ஒப்பாரி, பஜனை,
மாரியம்மன் பாடல்கள் பலராலும் தொகுக்கப்பட்டவையே.
பபூன், விதிப்பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள் மேலும் தேடப்பட்டு சேகரிக்கப்பட
வேண்டியவை ஆகும். திருமண வாழ்த்துப் பாடல்களை நேரில் கேட்டு பெறக்கூடிய நிலை இல்லை
எனும் போது இவரது இந்நூல் அத்தேடலைத் துண்ட உதவியுள்ளது.
இத்தொகுப்பை பார்க்கும் பொழுது இன்னும் பல செய்திகளும் கூட ஞாபகத்திற்கு வருகின்றன.
பபூன் பாடல்களைப் போன்ற பல பாடல்களும் பழமொழிகளும், கூற்றுக்களும் வழக்கிலிருந்தன.
மு. சிவலிங்கத்தின் தொகுப்பு இந்த அம்சங்களினாலேயே வேறுபடுகின்றது.
இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ள படங்கள் ஒரு வரலாற்று தகவல் தரும் ஆவணமாகத்
திகழ்கின்றன. இவை பல வெளிவந்தவை எனினும் கூட தென் இந்தியாவிலிருந்து புறப்பட்ட ஒரு
மக்கள் கூட்டத்தின் அந்தக் காலநிலை, உடை, அணிகலன், இல்லம், துயரம், ஏழ்மை,
இவைகளுக்கிடையே தோன்றும் ‘சிறுசிறு’ மகிழ்ச்சி என்பனவற்றை காட்டுவதோடு பிரசுரம்
பெற்றுள்ள நாட்டார் பாடல் அடிகளுக்கு உயிர்த்தன்மை தந்துள்ளன. பொருத்தமான இந்தத்
தெரிவு சிலாகித்துப் பேசப்பட வேண்டிய ஒரு விடயமே!
கோப்பி, தேயிலைத் தோட்டம் மாத்திரம் அல்ல தோட்டத்து கதாநாயகர்களும் தெனிபடுவது
விசேடமானதாகும்.
தாளின் தரமும், புத்தக அமைப்பும், அட்டைப் படமும், கடைசிப் பக்கத்தில் ஒரு மலைப்
பிரதேச காட்சிக்குள் வரும் மு. சிவலிங்கத்தின் படமும் பாடல் வரிகளும் பசுமையான
மலைகளையும், மேகங்களையும், மரக்கூட்டங்களையும் எம் மனக்கண்முன் கொணர்ந்து
நிறுத்துகிறது எனில் மறுப்பதற்கில்லை.
வ. செல்வராஜாவின் கனதியான அணிந்துரையுடன் வெளிவந்திருக்கும் மலையகத் தமிழர்
நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பு மேலும் ‘கனதியான உரையை தாங்கி வந்திருக்கலாமோ’ -
என்றொரு உள்ளுணர்வு, ஓர் ஆதங்கம் என்னுள் எழுகிறது.