கழிவறையில்லா வீட்டில்
குழந்தையின் பீயள்ள நேரிடலாம்
பனியில் நடுங்கும்
நடைபாதைவாசியின்
குளிருக்குத் தீயாகக் கூடும்
இத்தனை
சாத்தியங்களுக்குள்ளும்
வாசிப்பினூடே வசமிழந்து
ஈரம் பனிக்கும் கண்களைத் தேடி
நகரத்துச் சாலையின்
குறுக்கே கடக்கும் எத்தனிப்பில்
அச்சேறுகிறதென் கவிதை
யுகயுகன்
நன்றி- கணையாழி
பிச்சை புகினும் கற்கை நன்றே
கல்வி என்குதல் என்னது? - நீ
கற்றுப் பெறுகின்ற பொன்னது!
கண்ணெ னத்தகும் என்பது - கல்விக்
கண்ணிலார் அறிந்து கொண்டது!
திண்ணம் என்றே உரைக்குது - பெருந்
திருவும் பொருளுங் கிடைக்குது
இன்னும் வாழ்வு சிறக்குது - கல்வி
இல்லையேல் வாழ்வோ சிறுக்குது!
பாலுடன் பழமும் கலக்குது - அதைப்
போலும் ஜீவிதம் இனிக்குது
வாழ்வும் வளமும் கிடைக்குது - கல்வி
வளருஞ் சமூகமே சிறக்குது!
தேருருண் டோட அச்சாணி - மிகத்
தேவை யென்றே தெளியாது
பாருருண் டையிலே வாழுவதா? - மேம்
பாடடை யாமலே சாகுவதா?
‘எச்சம்’ எனநாம் சொல்லுவதும் - கல்வி
என்னும் பொருளெனக் கொள்ளுவதும்
உச்சம் அளிக்கும் அஃதொன்றே - அதன்
ஊடே காண்பது மேம்பாடே!
ஏ. எம். எம். அலி
பா பாடுமா படம்? 2
இதோ இருக்கிறது
ஒரு படம்
இது உங்கள்
இதயத்தில் பிடித்தால்
ஓர் இடம் - அதை
நான்கு வரிகளில்
கவிதைகளாக்கி
அனுப்பி வையுங்களேன்
எங்களிடம்
- தயாரிப்பாளர்
விடியலுக்காக...
வரதட்சணைக்
கொடுமையால்
வாலிபத்தை தொலைத்து...
நான்கு சுவர்களுக்குள்
கூண்டுக் கிளியாய்
அடைபட்டு
பெண்ணுக்கு மட்டுமாக
சமூகம்
எத்தி வைத்த
கற்புக்கு பாதுகாப்பின்றி
சம்பிரதாய சடங்குகளுக்குள்
கைதிகளாய்
சிறைப்படுத்தப்பட்டு
நாகரிக உலகிலும்
அடிப்படைக் கல்வியின்றி
அடுப்படிக்குள்
தஞ்சமடைந்து..
சுமைகளை மட்டுமாய்
எப்பொழுதும்
சுமந்து கொண்டு...
வாழ்க்கை நாடகத்தில்
கைப்பாவையாக்கப்பட்டு..
ஒதுக்கப்பட்டு
வெறுக்கப்பட்டு
ஏமாற்றப்பட்டு
பெண்கள்- ஒரு
கேலிப்பொருளாய்..
பந்தாடப்படும்
பரிதாபம் இன்னும்
ஒழிந்தபாட்டில்லை
பேனைகள் எழுதிக்
கொண்டு தானிருக்கின்றன.
இன்னும்
பேதைகள் அழுது
கொண்டு தானிருக்கின்றனர்
சமூகம் என்ற
புனைப்பெயரில்
அட்டகாசம் புரியும்
ஈனப்பிறவிகளின்
இதயங்கள்
இளகாதவரை
இன்னும்
எத்தனை யுகம்
கடந்தாலும்
இல்லை - நம் பெண்களுக்கு
‘இனி ஒரு விடிவு காலம்”!
எப். ஸம் ஸம் பாத்திமா
மடவளை
பட்டம்
விழி தேடிய வழி
நடை தேடிய விடை
வலி பெற்ற கூலி
க. கனோஜன்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
கடன்
அன்பை முறிக்கும் என்பதால்
மனைவியை
கட்டாயப்படுத்தி
தாய்வீடு அனுப்பினான்
கணவன்
வரதட்சணை பாக்கி
அனீஸ் எம். ஷாகிர்
நெருப்பாய் இரு...
சுட்டு எரிக்க அல்ல,
விளக்கேற்ற...!
ஏன்?
எம். சிதம்பரம்
பூச்சிக் கொல்லி
மருந்து கலந்திருக்கிறது
குளிர்பானத்துக்குத் தடை
ஆட்கொல்லி
மருந்து கலந்திருக்கும்
மதுபானத்துக்கு
தடை இல்லை
ஏன்?
எம். டி. எம். சாஜஹான்
அக்குரஸ்ஸ
சந்தேகம்?
வெளவாலின்
சந்தேகம்-
மனிதன்
ஏன்
தலைகீழாக
நடக்கிறான்?
உமா லட்சுமணன்
தொட்டுவிட எழுதுங்கள்
கவிதை -
அது
விட்டகலக் கூடாது
மனதை
எட்டடி விட்டால்
பூங்காவின் மண்ணை
எட்டுத் திக்கும்
புகழ் பரப்பும்
உண்மை.