மே தினத்தில் அதிவேக சாலைகள் இலவசம்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
மே தினமான நாளை (01) கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கடவத்தையிலிருந்து கொடகம வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பது இலவசம் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறித்துள்ளது.
 
அதன்படி, நாளை (01) காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் குறித்த இரு நெடுஞ்சாலைகளிலும் பயணிப்பதற்கு கட்டணம் அறிவிடப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மே தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள ஊர்வலத்திற்காக வரும் பஸ்களை கருத்திற்கொண்டே குறித்த நடைமுறை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அத்துடன், அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் பஸ்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை  பொலிஸார் விடுத்துள்ளனர்.
 
  • முடிந்தளவில் இடது பக்கமாக செல்லவும்.
  • வாகனத்தின் கதவுகளை மூடி, ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகள் ஏற்றப்பட வேண்டும்.
  • பஸ்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய வேகத்தில் செல்ல வேண்டும்.
  • அபாயகரமான முறையில், பொருட்களை ஏற்றிச் செல்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும்.
  • வாகனங்களின் யன்னல்களால், பாதைகளை நோக்கி குப்பைகளை வீசாதிருக்கவும்.
 
இதேவேளை, பேரணிகளில் கலந்துகொள்ளாத வாகனங்கள், தங்கள் பயணத்தின்போது, வாகன நெரிசல் ஏற்படும் நிலையில், மிக அருகிலுள்ள வெளியேறும் கடவையால் வெளியேறி வேறு பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
அத்துடன், வாகன நெரிசலை பெருமளவில் குறைக்கும் பொருட்டு, மே ஊர்வலத்திற்காக, காலி மற்றும் கொழும்பு நகருக்கு வருவோர், மிக அத்தியவசிய தேவைகள் தவிர்ந்து வேறு தேவைகளுக்காக பிரதான நகர் பகுதிக்குள் நுழைவதிலிருந்து தவிர்ந்துகொள்ளவும் என பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

Add new comment

Or log in with...