பயனர்களின் ரகசியத்தை காக்க ‘வட்ஸ்அப்’ புதிய நடைமுறை | தினகரன்

பயனர்களின் ரகசியத்தை காக்க ‘வட்ஸ்அப்’ புதிய நடைமுறை

உடனடி செய்தி பரிமாற்ற சமூகதளமான வட்ஸ்அப் தனது பயனர்கள் அனைவரதும் தொடர்பாடல்களை குறியீடாக மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தகவல்களை அனுப்புபவர் மற்றும் பெறுபவர்களுக்கு மாத்திரமே அதனை கையாள முடியுமாக இருக்கும்.

இதில் குரல் பதிவுகளும் இவ்வாறு மாற்றப்படும் என்று உலகெங்கும் ஒரு பில்லியன் பயனர்களைக் கொண்ட வட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு குறியீடாக மாற்றப்படுவதால் குற்றவாளிகள் அல்லது சட்ட அமுலாக்கள் அதிகாரிகள் இடைமறித்தால் அவர்களால் அந்த செய்தியை பார்க்க முடியாத நிலை ஏற்படும்.

தனிப்பட்ட செய்தி பரிமாற்றத்தை பாதுகாப்பது தமது முக்கிய நோக்கம் என்று வட்ஸ்அப்பின் உரிமை நிறுவனமான பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.

கலிபோர்னியா துப்பாக்கிதாரியின் ஐபோன் தரவுகளை தரும்படிஅப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க உளவுப் பிரிவான எப்.பி.ஐ. கோரிய சம்பவத்தை அடுத்தே வட்ஸ்அப் இந்த குறியீடு முறையை அமுல்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை கருத்துச் சுதந்திரத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி என்று சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. எனினும் அமெரிக்க நீதி திணைக்களம் இந்த நடைமுறைக்கு கவலை வெளியிட்டிருந்தது.


Add new comment

Or log in with...