காலில் விழுந்தும் பொலிஸார் மகனை காட்டவில்லை | தினகரன்

காலில் விழுந்தும் பொலிஸார் மகனை காட்டவில்லை

RSM
 
எனது பிள்ளைகள் பொலிஸ் நிலையத்தில் "அம்மா" என அலறும் சத்தம் கேட்டது. பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்து கதறினேன் அவர் எனது பிள்ளைகளை காட்ட மறுத்தார்.
 
இன்றைய தினம், காணாமல் போனோர் தொடர்பான சுயாதீன ஆணைக்குழுவின் ஆணையாளர் வி. விஜியரட்ண முன்னிலையில் சாட்சியமளித்த தாண்டிக்குளத்தை சேர்ந்த எம்.யோகராஜன் தெய்வானையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்றும் (29) நாளையும் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை இரண்டு நாட்கள் காணாமல் போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
 
இன்று (29) இது தொடர்பில் 311 பேரும் நாளைய தினம் (30) 218 பேருமாக மொத்தம் 529 பேர் சாட்சியமளிக்கவுள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"11629","attributes":{"alt":"","class":"media-image","height":"378","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், எனது கணவராகிய யோகராஜன் (45), மகன்களான யோகராஜன் டானியல் (21), யோகராஜன் டேவிட் (18) ஆகியோர் 2007 இல் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவித்தார்.
 
எனது இரண்டு குழந்தைகளும் இந்தியாவில் பிறந்ததன் காரணமாக பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் மற்றும் அடையாள அட்டை இருக்கவில்லை. வவுனியாவில் இராணுவத்தின் கெடுபிடி காரணமாக அடையாள அட்டை எடுப்பதற்காக கொழும்புக்கு சென்றிருந்தனர்.
 
இதன்போது அவர்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டனர். எனது கணவனையும் பிள்ளைகளையும் கைது செய்தபோது பார்த்த சாட்சியான முச்சக்கர வண்டி சாரதியையும் பொலிசார் கைதுசெய்து அழைத்து சென்றனர்.
 
பொலிசுக்கு சென்றபோது பொலிசார் எனக்கு எனது பிள்ளைகளை காட்ட மறுத்தனர். பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்து கேட்டேன் எனது பிள்ளைகளை காட்டுங்கள் என்று கதறினேன் பொலிஸ் அதிகாரி அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லையென கூறினார்.
 
எனது பிள்ளைகள் அம்மா என அழும் சத்தம் எனக்கு கேட்டது. நான் அவர்களை பார்க்க முயற்சி செய்த போது என்னை வெளியே போகச்சொல்லி மிரட்டினர்.
 
பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே வரும்போது நீ புலிதானே எனக் கூறி என்னையும் கைது செய்தனர் எனத் தெரிவித்தார்
 
(கோவில்குளம் குரூப் நிருபர் - கே. குணா)

Add new comment

Or log in with...