பாண் விலை 4 ரூபா அதிகரிப்பு | தினகரன்


பாண் விலை 4 ரூபா அதிகரிப்பு

பாண் விலையை நேற்று நள்ளிரவு முதல் 4 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.ஆனால் இந்த முடிவை எதிர்த்துள்ள அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதற்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக எச்சரித்துள்ளது.

பிரிமா நிறுவனம் கடந்த வாரம் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 7 .20 சதத்தினால் அதிகரித்தது. இதனையடுத்து கடந்த வாரம் முதல் பாண் விலைகளை உயர்த்த பேக்கரி உரிமையாளர் சங்கம் திட்டமிட்டது. ஆனால் 15 ஆம் திகதி கொண்டாடப்பட்ட உலக பாவனையாளர் தினத்தை முன்னிட்டு பாவனையாளர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதற்காக பாண் விலை உயர்வு பின்போடப்பட்டதாக பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்தார். இதேவேளை பாண் விலையை 4 ரூபாவினால் அதிகரிக்கும் முடிவுக்கு எதிராக வழக்குத் தொடர இருப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களை நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும் ஒரு இறாத்தல் பாணின் மூலம் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் 9 ரூபா இலாபமீட்டுவதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்ைக எடுக்காவிட்டால் தமது சங்கம் உரிய நடவடிக்ைக எடுக்கும் என்றார்.

கடந்த வருட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினூடாக கோதுமை மாவிலைகள் 12.50 ரூபாவினால் குறைக்கப்பட்டன.

இதனையடுத்து பாண் விலைகள் 6 ரூபாவினால் குறைக்கப்பட்டதோடு கோதுமை மா உற்பத்திகளின் விலைகள் குறிப்பிடும் படியாக குறைக்கப்படவில்லை.

எரிபொருள் விலைகள் மற்றும் பேக்கரி உற்பத்தி செலவுகள் அண்மைக்காலத்தில் குறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து கோதுமை மா விலை 7.20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

இந்த ஒரு காரணத்தினால் பாண் மற்றும் கோதுமை மா சார்ந்த உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது நியாயமற்றது என பொது மக்களும் நுகர்வோர் அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் வர்த்தக வாணிப அமைச்சு தலையீடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...