அ'பற்று நீர் வழங்கல் காரியாலய பிரிப்புக்கு எதிராக பேரணி

RSM 
 
அக்கரைப்பற்று நீர் வழங்கல் பிராந்தியக் காரியாலயத்தை பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனஆர்ப்பாட்ப் பேரணியொன்று  இன்று (18) பிற்பகல் 1.30 மணியளவில் இடம் பெற்றது.
 
 
அக்கரைப்பற்று பள்ளிவாயல்கள் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பேரணி ஜும்ஆத் தொழுகையின் பின் அக்கரைப்பற்று ஜும்ஆபட்டினப்பள்ளி வாயல் முன் பிரதான வீதியிலிருந்து ஆரம்பித்து அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில்  அக்கரைப்பற்று பிரதேச செயலகம் வரை சென்று முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். ஸபீஸ், மற்றும் யூ.எல். உவைஸ் இனால் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லெத்தீப் அவர்களிடம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
 
 
 
பேரணியில் சென்றோர் “நீர் வழங்கல் பிராந்தியக் காரியாலயத்தைப் பிரிக்காதே”,  “பிராந்தியக் காரியாலயத்தை துண்டாடாதே”, “ ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களே அக்கரைப்பற்று மக்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள”;. “ ஜனாதிபதி அவர்களே அக்கரைப்பற்று  பிராந்தியக் காரியாலயம் துண்டாடுவதைத் தடுத்து நிறுத்துங்கள்” “அமைச்சர் ரவூப் ஹக்கீமே ஒழிந்து போ” ஏன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் வாசகங்களை கோஷித்தபடி பேரணியில் சென்றனர்.
 
இப் பேரணியில் பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள், கழகங்கள், சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த பல வருடங்களாக அக்கரைப்பற்றில் செயற்பட்டு வரும் நீர் வழங்கல் பிராந்தியக் காரியாலயத்தை பிரித்து கல்முனைக்கு கொண்டு செல்வதைத் தடுத்து நிறுத்துமாறு அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல் சம்மேளனத்திற்கு அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் ஏழிடமிருந்து கிடைக்கப்பெற்ற மகஜர்களின் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை (14) மாலைநடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கேற்ப இப்பேரணியும், மகஜர் கையளிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
 
 
இதேவேளை, நாளைய தினம் (19) முஸ்லிம் காங்கிரஸின் மாநாடு பாலமுனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
(அக்கரைப்பற்று தினகரன் சுழற்சி, அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர்கள்)

Add new comment

Or log in with...