மின் கசிவு; ஒரே குடும்பத்தின் நால்வர் பலி (Update)

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
பதிப்பு 02

4 உடல்களும் வெவ்வேறு இடத்தில்; மரணத்தில் சந்தேகம்

 
தெஹிவளை, கௌடான வீதியில், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த சடலங்கள், குறித்த வீட்டின் வெவ்வேறு பகுதிகளிலில் மீட்கப்பட்டமையானது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த வீட்டின் கீழ்ப் பகுதியில் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் வெலிகமவை சொந்த இடமாகக் கொண்ட வர்த்தகர் ஹுஸைன் மெளலானா (65) என்பவர் எனவும், அவர் குறித்த வீட்டின் கதிரையில் இருந்தவாறும், அவரது மனைவி மர்ஜானா (58) அறை ஒன்றிலிருந்தும், 13, 14 வயது இரு சிறுமிகளான விசானா, உசானா ஆகியோர் வீட்டின் மண்டபத்திலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த வீட்டின் முதலாம் மாடியில் பங்களாதேஷைத் சேர்ந்த குடும்பத்திற்கும், மூன்றாம் மாடி அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டிருந்துள்ளது.
 
அத்துடன், இவர்கள் நேற்றைய தினம் (15) மரணமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு, வழமையாக திறந்து காணப்படும் வீட்டின் கதவு, ஜன்னல்கள் இன்று காலை 10.00 மணி வரை மூடப்பட்டிருந்தமையால், அயலவர்கள் பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த வீட்டின் கதவுகளை உடைத்து பரிசோதனை செய்தபோதே குறித்த வீட்டிலிருந்து நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
குறித்த இடத்திற்கு, பொலிஸ் சொகோ குழுவினர் வரவழைக்கபட்டுள்ளதோடு, மின் பொறியியலாளர் மற்றும், இரசாயன பகுப்பாய்வாளர் வரவழைக்கப்பட்டு விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
பதிப்பு 01
 

மின் கசிவு; ஒரே குடும்பத்தின் நால்வர் பலி (Update)

 

தெஹிவளை, கெளடான வீதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
இல 40, தெஹிவளை, கெளடான வீதி எனும் முகவரியைக் கொண்ட 3 மாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் மாடியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக, குறித்த நால்வரும் மரணமடைந்துள்ளதோடு, அவர்களது உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில், வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி, மகள் மற்றும் அவர்களது உறவினரின் மகள் ஒருவருமே அவ்வீட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த விடயம் எவ்வாறு இடம்பெற்றது என இன்னும் தெரியவில்லை எனத் தெரிவித்த தெஹிவளை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Add new comment

Or log in with...