சிறுநீரக மோசடி? வெள்ளவத்தையில் 8 பேர் கைது

சிறுநீரகம் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இந்தியர்கள் 08 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
வெள்ளவத்தை மற்றும் ஹெவலொக் டவுன் பகுதியில் வைத்தே குறித்த எட்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
வயிற்றில் சத்திரசிகிச்சை வெட்டுக்காயம் காணப்பட்ட 06 பேர், வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த வேளையில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் சாரதிகள் மற்றும் தையல் வேலை செய்வோரும் உள்ளடங்குவதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
 
இதேவேளை ஹெவ்லொக் டவுன் பிரதேசத்தில் வைத்து வயிற்றில், சத்திரசிகிச்சை காயங்களுடன் காணப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, இவ்வாறான மேலும் பலரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
அண்மையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து இவ்வாறான சிறுநீரக மாற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை வைத்தியர்கள் சிலரை விசாரணைக்குட்படுத்தியதோடு, இலங்கையில், வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...