பிணை நிராகரிப்பு; பணியும் இடைநிறுத்தம்

முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் பிணை மனு தொடர்பான விசாரணை எதிர்வரும் மார்ச் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
குறித்த மனு இன்றைய தினம் (29) உச்ச நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்களுக்கு பிணை வழங்கவேண்டாம் என, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுசித் முதலிகே நீதிமன்றில் தெரிவித்தார்.
 
பிணை மனு குறித்த விசாரணைகளின் பின்னர் சட்ட மாஅதிபரின் தற்காலிக கோரிக்கை குறித்து தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
 
அத்துடன், விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.
 
இதேவேளை யோஷித ராஜபக்‌ஷவின் பணியை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
 
யோஷித குறித்து இடம்பெற்று வரும் வழக்கு விசாரணை, சுயாதீனமாக இடம்பெறும் வகையில், அவரது சேவையை இடைநிறுத்துமாறு, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அவரது சேவையை இடைநிறுத்துவதற்கான உத்தரவை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.
 
அதன் அடிப்படையில் 2016 பெப்ரவரி 28 ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில், அவரது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, உடனடியாக அமுலாகும் வகையில், அவரது சம்பளம் மற்றும் கொடுப்பனவு என்பனவும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 
இதன் அடிப்படையில், கடற்படை தலைமையகத்தின் அனுமதியின்றி, யோஷித ராஜபக்‌ஷ, கடற்படை முகாமிற்குள் நுழைவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...