ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல் | தினகரன்


ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல்

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். வடமேல் மாகாணசபைத் தேர்தலில் லக்சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான 5.3 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை குறித்தே இவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கும் ஏனைய இருவருக்கும் எதிராக குருநாகல் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

லக்சதொசா நிறுவத்தின் முன்னாள் தலைவர் கே.எம்.ஆர்.பெர்னாண்டோ மற்றும் அமைச்சரின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் ராஜ், மொஹைடீன் ஆகியோருக்கும் எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மோசடிக்கு உடந்தையாக இருந்தார்கள் என இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இம்மூவருக்கும் எதிராகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

முதலாவது குற்றவாளியான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் யந்தம்பலவ, வெஹர மற்றும் மல்லவபிட்டிய ஆகிய களஞ்சியங்களிலிருந்து 5.2 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை வெளியே கொண்டு செல்வதற்கு உத்தரவிட்டதாகவும், 2013ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற வடமேல் மாகாணசபைத் தேர்தல் காலத்தில் குருநாகல் மாவட்டத்தில் அவற்றை பயன்படுத்தியதாகவும் சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவினால் கடந்த வருடம் மே மாதம் 5ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ஜேன்ஸ்டன் பெர்னான்டோ கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். லக் சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 


Add new comment

Or log in with...