இலங்கை - -இந்திய முதல் இருபது- 20 போட்டி இன்று | தினகரன்

இலங்கை - -இந்திய முதல் இருபது- 20 போட்டி இன்று

இலங்கை - இந்திய அணிகள் மோதும் முதல் இருபது- 20 ஆட்டம் புனேயில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

டோனி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று இருபது-20 போட்டியிலும் வென்று வலுவான நிலையில் உள்ளது. இதனால் சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

ஆசிய கிண்ணம் மற்றும் உலகக் கிண்ணத்திற்கு முன்பாக இந்த தொடர் நடைபெறுவதால் இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.

அவுஸ்திரேலியாவில் சேபித்த அதிரடி வீரர் வீராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக புதுமுக வீரர் நெகி இடம் பெற்றுள்ளார்.

இதே போல் ரகானே, மணீஷ் பாண்டே, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது-20 போட்டியில் ஆடவில்லை.

ரோகித் சர்மா, துடுப்பாட்டத்தில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். இதே போல் அணித்தலைவர் டோனி, ரெய்னா, யுவராஜ் சிங் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் உள்ளனர். அவுஸ்திரேலிய பயணத்தில் சிறப்பாக வீசிய ஜஸ்பிரீத் பும்ரா மீது இந்திய அணிக்கு எதிர்பார்ப்பு உள்ளது. அஸ்வின், நெஹ்்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப வீரர் தில்சான் இன்றை ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடவில்லை. எஞ்சிய போட்டியில் அவர் அணியோடு இணைகிறார். அணித்தலைவர், சண்டிமால், கபுகேதிர, திசார பெரேரா போன்ற முன்னணி வீரர்கள் அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் கடைசியாக 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் (டாக்கா) மோதி இருந்தது. இதில் இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் இன்று மோத இருப்பது 7ஆவது முறையாகும். இரு அணிகளும் தலா 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது. 


Add new comment

Or log in with...