கட்டட வேலைக்காக வந்தவர் 16 வயது சிறுமியுடன் மாயம் | தினகரன்


கட்டட வேலைக்காக வந்தவர் 16 வயது சிறுமியுடன் மாயம்

16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகநபரான இளைஞரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி. நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.

நீதிபதி முன்னிலையில் நேற்று (30) ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பாலமுனை இல் உள்ள வீடொன்றில் கட்டட நிர்மாண வேலைக்காக கட்டடத் தொழிலாளியாக வேலை செய்த 22 வயது இளைஞர், குறித்த வீட்டில் வேலை செய்து வரும் வேளையில் அவ்வீட்டு உரிமையாளரின் மகளுடன் (16 வயது) காதல் வயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குறித்த சிறுமியை கடந்த 26 ஆம் திகதி பிற்பகல், அவ்வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் அன்றைய தினமே அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிசார் இவர்களை தேடி வலைவிருத்துக் கொண்டிருக்கும் போது கடந்த வெள்ளிக்கிழமை மாலை (29) இருவரும் சட்டத்தரணியூடாக பொலிசில் சரணடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கோளாவில் 3 இத்தியடியைச்சேர்ந்த இளைஞர், குறித்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருக்கோவில், செங்கலடி போன்ற பிரதேசங்களுக்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர் - எஸ்.ரி. ஜமால்தீன்)


There is 1 Comment

Add new comment

Or log in with...