கல்லுடன் கட்டி கிணற்றில் சிறுவனின் சடலம் | தினகரன்

கல்லுடன் கட்டி கிணற்றில் சிறுவனின் சடலம்

திருகோணமலை சம்பூர் ஏழாம் வட்டார கிணரொன்றிலிருந்து வயிற்றில் கல்லொன்று கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

6 வயதுடைய குகதாஸ் என்ற சிறுவனே கிணற்றிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சிறுவன் 1ஆம் தரத்திற்கு இவ்வருடமே சேர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,- குறித்த சிறுவன் தனது சகோதரனுடனும் பக்கத்து வீட்டிலுள்ள சிறுவனுடனும் திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த வேளை மாலையில் பக்கத்து வீட்டு சிறுவன் அவனது வீட்டுக்குச் சென்றுள்ளான். உயிரிழந்த சிறுவனின் சகோதரன் கடைக்குச் சென்றுள்ளான்.

இச் சம்பவம் நடந்து சிறிது நேரத்தின் பின் உயிரிழந்த சிறுவனின் தாய் பிள்ளையை தேடியுள்ளார். மாலை 5.30 மணியாகியும் பிள்ளை இல்லாமையினால் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்பின் பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து சிறுவனை தேடிய போது அச் சிறுவன் இறந்த நிலையில் கட்டப்படாத கிணறு ஒன்றுக்குள் கிடந்துள்ளான்.

இச் சிறுவன் கிணற்றுக்குள் இடறி விழுந்துள்ளான் என்றுதான் எல்லோரும் கருதியுள்ளனர்.

இதனையடுத்து இது சம்மந்தமாக தோப்பூர் ,மூதூர் பிரதேசங்களுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூறுல்லாவிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்; சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கும் நீண்ட தூரம் என்பதால் அவர் 11.00 மணிக்கு பிறகே சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன் பின் திடீர் மரண விசாரணை அதிகாரி வந்ததன் பின்னர் நேற்று செவ்வாய் கிழமை 12.10இளைஞன் ஒருவன் கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை எடுத்து வெளியில் கொண்டு வந்த போது எல்லோருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது.

சிறுவன் கிணற்றுக்குள் இடறி விழுந்துதான் உயிர் இழந்துள்ளான் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் சிறுவனின் வயிற்றில் கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததை கண்டு பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

குறித்த சம்பவத்தில் உயிர் இழந்த அப் பாலகன் கொலை செய்யப்பட்டு வயிற்றில் கல் கட்டபட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டானா? அல்லது கல் கட்டப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டானா? என்கின்ற விடயம் பெரிதும் குழுப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பூர் பொலிஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுவனின் சடலம் நீதிவான் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தோப்பூர் தினகரன் விசேட நிருபர் அன்புவழிபுரம் தினகரன் நிருபர்

 


Add new comment

Or log in with...