இலங்கைத் தமிழர்கள் மீண்டெழ வேண்டும்!

வடமாகாண உழவர் திருவிழாவில் வைரமுத்து

தென்னிந்திய தமிழ்நாட்டிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் நாம் நிச்சயமாக கலைப்பாலம் கட்டுவோம். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்ற நம்பிக்கையை உங்களுக்குத் தருகிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்தார்.

வடமாகாண விவசாய அமைச்சு ஏற்பாடு செய்த உழவர் திருவிழா நேற்றுமுன்தினம் (23) சனிக்கிழமை முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், தென்னிந்திய பிரபல கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டதுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 166 விவசாயத்துறை மற்றும் கால்நடை துறைகளில் பிரகாசிக்கும் முயற்சியாளர்கள் விருது, சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன்போது விஷேட உரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது;

நிகழ்ச்சித் தொகுப்பாளர் அடிக்கடி வானத்தை பார்த்துக் கொண்டிருப்பதை நான் அவதானித்துக் கொண்டே இருந்தேன். வானம் முணுமுணுப்பதைப் பார்க்கிற போதெல்லாம் எங்கே வானத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து விடுமோ, இந்த மண் நனைந்து விடுமோ, அந்த மழையில் எங்கள் தமிழர்கள் கரைந்து விடுவார்களோ, அல்லது நிகழ்ச்சி நடத்த முடியாமல் கூட்டம் கலைந்து விடுமோ, என்ற அச்சத்தின் காரணமாக, ஆர்வத்தின் காரணமாக மழையே வழிவிடு, வாழவிடு என்றெல்லாம் வானத்திற்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

நான் நினைத்துக் கொண்டிருந்தேன். வெடி மழையில் கரைந்து போகாத தமிழர்களா இந்த இடி மழையில் கரைந்து விடப் போகிறார்கள். இந்த மண்ணின் மக்களே... இரத்த உறவுகளே ..உங்களையெல்லாம் பார்க்கின்ற பொழுது என் தோள்கள் விரிந்து நிற்கின்றன. என் மார்பு அகலமாகிறது.

உங்கள் இரத்தத்தில், கண்ணீரில், வியர்வையில் இந்தியாவில் அழுது கொண்டிருந்த ஓர் ஆன்மா உங்கள் முன்னால் வந்து பேசிக் கொண்டிருக்கிறது.

உங்கள் கைகளைத் தொட்டுப் பார்க்க வந்திருக்கிறேன். உங்களது கண்களில் நம்பிக்கை இருக்கின்றவா என்று பார்க்க வந்தேன். உங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்தேன். வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்று நம்பிகையை விதைக்க வந்தேன்.

நான் இதற்கு முன்னர் கொழும்பு வந்திருக்கிறேன். ஆனால் வடபகுதிக்கு இப்போதுதான் முதல் முறையாக வந்திருக்கிறேன். இந்த மண்ணைத் தொட்டு வணங்குகிறேன். இந்த மண்ணைத் தொட்டு வணங்குகின்ற போது எனது உள்ளம் உணர்ந்தது. எனது மூளை உணர்ந்தது. என் தமிழ் உணர்ந்தது. காரணம் உங்கள் பாதி நான், எங்கள் பாதி நீங்கள். அதனால் இந்த இரத்த உறவு, அன்பு உறவு என்றும் விட்டுப் போகாது.

நண்பர்களே, சகோதரர்களே, சகோதரிகளே, வார்த்தைகள் எல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல. ஊர்ப் பெயர்கள் எல்லாம் வெறும் ஊர்ப்பெயர்கள் அல்ல. வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, புங்குடுதீவு, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், என்ற பெயர்களை உச்சரிக்கின்ற போதெல்லாம் இவை அனைத்தும் ஊர்ப்பெயர்கள் அல்ல. சரித்திரத்தின் பெரும் குறிப்புக்கள் என்ற உண்மையை இந்த உலகம் தந்திருக்கிறது.

ஆசியாவிலேயே கல்வியில் முதலிடத்தைப் பெற்றுள்ள மண்ணிலேயே நான் நிற்கிறேன். உலகத்திற்கே தமிழர்களின் முகவரியை எழுதிக் காட்டிய இலங்கைத் தமிழர்களின் மண்ணிலே நான் நிற்கிறேன்.

நான் எழுதிய முதல் ஒரு பாடல் வெற்றிவேரு வாசம், வெடலபுள்ள நேசம் என்கின்ற வரி.

இந்த வரிக்குச் சொந்தக்காரன் வைரமுத்து. விருது வாங்கியது வைரமுத்து. ஆனால் அந்த விருது, அந்தப் பெருமை, எல்லாம் இலங்கையின் தோட்டத் தொழிலாளர்களுக்குச் செல்ல வேண்டியது தோழர்களே. வெற்றிவேரு வாசம், வெடலபுள்ள நேசம் என்கின்ற வரியை ஈழத்தின், மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்களின் பாட்டுத் தொகுப்பில்தான் நான் முதல் முதலில் பார்க்கிறேன்.

எனவே, அந்த மண்ணுக்கும், தொழிலாளர்களுக்கும் நான் காணிக்கை செலுத்த வந்திருக்கிறேன். இந்த உலகத்தில் எந்த இனமும் படாத கஷ்டங்களை எனது தமிழ் இனம் பட்டிருக்கிறதே என்ற வேதனை எனக்குள் இருக்கிறது.

இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது என்னுடைய ஒரு கண்ணில் பெருமிதம், மறுகண்ணில் ஈரம். இந்தப் பெருமிதத்தோடும், ஈரத்தோடும்தான் உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன்.

என்னை இந்த மண்ணுக்கு அழைத்ததால் நான் பெருமைப்படவில்லை. முதலமைச்சரே, நீங்கள் என்னை அழைத்ததால் இந்த மண்ணை முத்தமிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததில் பெரும் சந்தோஷமடைகிறேன். என்னுடைய தமிழ் மக்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றேன். முள்ளிவாய்க்கால் பார்த்தேன். முல்லைத்தீவு பார்த்தேன். ஆனந்தபுரம் பார்த்தேன். புதுக்குடியிருப்பு பார்த்தேன். சாவகச்சேரியை கடந்து வந்தேன். ஆனையிறவு பார்த்தேன்.

நடந்த சம்பவங்களைப் பேசுவதற்கு நான் வரவில்லை. ஆனால், இந்த நிகழ்வுகள் இந்த சரித்திரக் குறிப்புக்கள், இந்த வாழ்வியல், இந்த வீரம், தியாகம், என்பவையெல்லாம் இந்த மண்ணில் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த ஈழம் பற்றி எழுதுவேன். எனது கைவிரல் சம்மதிக்கும் காலம் வரை எழுதுவேன். தமிழ் எனக்கு துணை இருக்கும் காலம் வரை, என் நெஞ்சில் ஈரம் இருக்கும் வரை, தமிழர்களின் கண்ணீர் ஓயும் காலம் வரை எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

என்னை நீங்கள் ஏன் அழைத்திருக்கிறீர்கள்? இவனுக்கு இலக்கணம், கவிதை தெரியும் என்றா, வெண்பா தெரிமென்றா? இவற்றுக்கு நான் அழைக்கப்படவில்லை. வைரமுத்து பேரரசு மட்டுமல்ல ஏர் பிடித்து உழுதவனின் திருமகன் என்ற அடிப்படையில்தான் இங்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்.

இன்னும் நான் விவசாயிதான். கலப்பை பிடித்தவன்தான். தண்ணீர் இறைத்தவன். ஆடு, மாடுகளோடு எனது வாழ்க்கையைத் தொடங்கியவன். ஆதலால்தான் விவசாயத்தின் வழி எனக்குத் தெரிகிறது. விவசாயிகளின் வழி புரிகிறது. எனவே தோழர்களே, விவசாயம் என்பது முக்கிய உறுப்பு என்பது நீங்கள் அறிவீர்கள். நானும் அறிவேன்.

ஆனால் அந்த விவசாயம் இன்றைய நிலையில் எப்படியிருக்கிறது? நவீன உலகில் இந்த விவசாயம் எப்படித் தேய்கிறது? அல்லது பிரிகிறது? எப்படிக் குறைகிறது என்பதையெல்லாம் இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த மண்ணின் விவசாயத்தை தெரிந்து கொண்டால் தமிழனின் வரலாற்றை தெரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம். எங்கள் ஊரில் ஒருவர் வெளிநாடு சென்றார். அப்போது அவரிடம் “வாட் இஸ் யுவர் கல்சர்” என (உங்களுடைய கலாசாரம் என்ன?) என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கொஞ்சம்கூட யோசிக்காமல் (அவர் கல்சர் இஸ் அக்ரிகல்ச்சர்) எமது கலாசாரம் விவசாயம் எனச் சொன்னார்.

விவசாயம்தான் கலாசாரம். நதிக்கரையில் பிறந்தது நாகரிகம். அந்த நாகரிகத்தின் உச்சம்தான் விவசாயம். இந்த மண்ணில் கல்வி என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்பே விதைக்கப்பட்டு விட்டது.

உலகத் தமிழர்களில் அதிகம் கற்றவர்கள் யார் என்றால் அது இலங்கைத் தமிழர்கள் என்று நான் ஐ.நா வரை சொல்லுவேன். அவ்வாறு ஆழமான கல்வி கற்றவர்கள். ஆற்றலுள்ளவர்கள். இந்த அறிவார்ந்த திருச்சபையின் முன்னால் நான் அறிவார்ந்த கருத்துக்களைத்தானே பேச வேண்டும்.

தமிழன் வேட்டைக்கார காலத்தில் வாழ்க்கையைத் தொடங்கினான். மழையில் வேட்டையாடினான். குறிஞ்சியில் இருந்து மெல்ல முல்லைக்கு வந்து, மருதத்திற்கு வந்தான். முல்லையென்பது காடு. குறிஞ்சி என்பது மலை. மருதம் என்பது நிலம். வயலும் வயல் சார்ந்த இடம்தான் மருத நிலம். அங்குதான் வேளாண்மை பிறந்தது. வேட்டைக் கலாசாரத்திற்கும், வேளாண்மைக் கலா சாரத்திற்கும் என்ன வேறுபாடு என்று தெரிந்துகொண்டால் இந்த உழவர் பெருவிழாவுடைய பெருமையை இங்கு வந்திருக்கின்ற ஒவ்வொரு தமிழர்களும் உணர்ந்து கொள்வீர்கள்.

வேட்டைக் கலாசாரம் என்பது உணவு இருந்த இடத்தை மனிதன் தேடிப் போனது. வேளாண்மைக் கலாசாரம் என்பது மனிதன் இருக்கும் இடத்தைத் தேடி உணவு வந்தது. மனிதன் உணவைத் தேடிப் போனதற்கும், உணவு மனிதனைத் தேடி வந்ததற்கும் பத்தாயிரம் ஆண்டுகள் இடைவெளி இருந்திருக்கிறது தோழர்களே.

இவ்வாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் மனிதன் வேட்டைக் கலாசாரத்திலிருந்து வேளாண்மைக் கலாசாரத்திற்கு வந்தான். தமிழனது விவசாயம் பெருமைப்படச் சொல்லக் கூடிய விவசாயம். திருவள்ளுவர் விவசாயத்தைப் பற்றி “உழவு” என்ற அதிகாரத்தை எழுதியிருக்கிறார்.

விவசாயத்தை வாழ்க்கையில் பழமொழிகளில், இலக்கியத்தில் கற்றுக் கொடுத்தவன் , கற்றுக் கொண்டவன் தமிழன். மரபுவழி அறிவு என்று சொல்லுகிறோம் அல்லவா? அந்த மரபுவழி அறிவை தமிழர்கள் தேடி வந்தார்கள்.

உங்களுக்கு இந்த நேரத்தில் ஒரு உண்மையைச் சொல்லலாம் என்று ஆசைப்படுகிறேன். ஜப்பானிய நடுகை முறையொன்று உலகத்திற்கே அறிமுகப்படுத்தப்பட்டது. நூல் பிடித்து நடுவது. அதற்கு முன்னால் எங்கள் தாய்மார்களும்,சகோதரிகளும் இஷ்டப்படி நடுவார்கள். அவர்கள் வைத்ததே வரிசை என்றிருந்தது. ஜப்பானிய விவசாய முறை என்பது நூல் பிடித்து விட்டு வரிசை உண்டாக்கியது. இதை ஜப்பானிய மரபு முறை என்று சொன்னார்கள்.

தமிழன் அதற்கு முன்னாலேயே அந்த மரபு முறையைக் கண்டுபிடித்து விட்டான். ஜப்பானிய முறை என்பது திணிக்கப்பட்டது. தமிழர்களின் மரபு முறை மறைக்கப்பட்டது. இந்த விவசாய நடும் முறை இடைவெளியை முதலில் சொன்னவன் தமிழன்.

அந்த இடைவெளி எப்படியிருக்க வேண்டும் என்று பழமொழியில் சொன்னான். நண்டு ஊர நெல்லு, நரி ஓட கரும்பு, தேர் ஓட தென்னை, வண்டி ஓட வாழை என்று சொன்னவன் தமிழன். எனவே, ஊடக நண்பர்களே , விவசாய நடும் இடைவெளி முறையை தமிழன் கண்டுபிடித்துள்ளது என் உலகத்திற்குச் சொல்லுங்கள்.

நண்டு ஊர நெல், நெல் நாற்று நட்டால் அந்த நாற்றுகளில் இரண்டுக்கு மத்தியில் நண்டு ஊர வேண்டும். அந்த இடைவெளி வேண்டும். நரி ஓட கரும்பு, கரும்பு நட்டால் இரண்டு கரும்புக்கு மத்தியில் நரி ஓட வேண்டும். தேர் ஓட தென்னை, தென்னை நட்டால் அந்த இரு தென்னைக்கு மத்தியில் தேர் ஓட வேண்டும். வண்டி ஓட வாழை, வாழை நட்டால் அந்த இரண்டு வாழைக்கு மத்தியில் வண்டியோட வேண்டும் என்று உலகத்திற்கு வேளாண்மை சொல்லிக் கொடுத்தவன் தமிழன்.

நாங்கள் எ்தனையோ பெருமைகளை இழந்து விட்டோம். அவ்வாறு இழந்த பெருமைகளை மீட்டெடுக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. கற்றோர்கள் மத்தியில் இருக்கிறது. விவசாயத்தை வெறுக்காதீர்கள். நன்றாக கல்வி கற்று விட்டு நிலத்தில் இறங்குங்கள். இந்த உலகத்திற்கு சோறு போடக் கூடிய ஆற்றல் தமிழர்களுக்கு உண்டு என்று காட்டுங்கள்.

இந்த உழவர் திருவிழா எதற்கு கொண்டாடப்படுகிறது தெரியுமா தோழர்களே? சூரியனுக்கு நன்றி சொல்ல, நிலத்திற்கு நன்றி சொல்ல, மாடுகளுக்கு நன்றி சொல்ல, மக்களுக்கு நன்றி சொல்ல... மனிதன் மனிதனுக்கு நன்றி சொல்லியிருக்கிறான். ஆனால் மனிதன் மாட்டுக்கு நன்றி சொல்லியிருக்கின்றானா?. தமிழன்தான் மாட்டுக்கு நன்றி சொல்லி அதனை திருவிழாவாகக் கொண்டாடியவன், அதை கலாசாரமாக மாற்றியவன் தமிழன்.

இதை விட முக்கியமான விடயமொன்றைச் சொல்ல வேண்டும். மண்ணுக்கு உயிர் உண்டு என்று கண்டுபிடித்தவன் தமிழன். மண்ணுக்கு உயிர் உண்டா? தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று கண்டு பிடித்தவன் நோபல் பரிசு பெற்றான். . ஆனால் தமிழன் மண்ணுக்கு உயிர் உண்டு என்று கண்டுபிடித்தான்.

இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே தமிழர்களே, எமது மரபுகளை மறந்து விடாதீர்கள். முன்னோர்களை மறந்து விடாதீர்கள். முன்னோர்கள் கற்றுக் கொடுத்தவையை நீங்கள் நன்கு செவிமடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே, இந்த உழவர் திருவிழா இளைஞர்களுக்குத்தான் உணர்த்தப்பட வேண்டும். விவசாயிகளுக்கு அல்ல. விவசாயி என்பவன் உணர்ந்திருக்கிறான். ஒரு விவசாயி படும் கஷ்டம்தான் இந்த மண்ணை இன்னமும் ஈரமாக வைத்திருக்கிறது.

முதலில் உள்ளூர்க் கலைஞர்களை கெளரவியுங்கள். ஒரு பெண் பாட்டுப் பாடினால் அதனைக் கொண்டாடுங்கள். ஒரு இளைஞன் ஆட்டம் ஆடினால் அவனைக் கொண்டாடுங்கள். ஒரு புதிய கவிதை எழுதினால் அவனைக் கொண்டாடுங்கள். மண்ணின் உள்ளூர் சக்திகளை பெருக்கி எடுங்கள். உள்ளூர் உற்பத்திகளை பெருக்கி எடுக்கின்ற போது நீங்கள் உச்சம் தொடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வரலாறுகளின் இரத்தக் கண்ணீரை வரலாறு துடைத்துக் கொள்ளும். உங்களது இரத்தக் கண்ணீரை யார் துடைப்பார்கள் என்பதுதான் கேள்வி?. நான் இங்கு வந்த பிறகு உரையாடிப் பார்த்தேன். உறவாடிப் பார்த்தேன். சில தமிழர்களை சந்தித்தேன்.

எனக்குள்ள ஒரு கேள்வி... விவசாயத்தைப் பற்றி பேசுகிறோமே அந்த விவசாயத்தை செய்வதற்கு காணி வேண்டாமா, அந்த விவசாயக் காணிகள் எங்கள் தமிழர்களுக்கு திரும்பக் கிடைக்காதா என்ற ஏக்கம் இந்த மண்ணில் இருக்கிறது. மீள்குடியேற்றம் வேண்டும் என்ற ஏக்கம் இந்த மண்ணிலே இருக்கிறது. அந்த ஏக்கத்தை வெளிப்படுத்துவது எமது கடமை என்றே எமக்குத் தோன்றுகின்றனது.

பழைய சம்பவங்களை விட்டு மெல்ல வெளியே வாருங்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இந்த மண்ணைப் போல வீரிய மண், ஒரு தியாக மண், அறிவார்ந்த மண் உலகத்தில் எங்கு போனாலும் பார்க்க முடியாது.

நீங்கள் அவ்வளவு பட்டிருக்கிறீர்கள். எனக்கு சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் பயங்கரம். ஒரு குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கிறது தனது தாய் இறந்தது தெரியாமல். ஒரு சவத்தின் மீது அந்தக் குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கிறது. பால் அற்று தாயின் மடியில் அந்தக் குழந்தையும் இறந்து போகிறது.

இன்னுமொரு சம்பவம், ஒரு தாயும் மகளும் அரிசி வாங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். வெடி வீழ்கிறது. இருவரும் செத்துப் போகிறார்கள். அரிசி தரையில் சிதறிக் கிடக்கிறது. அதனைப் பார்த்து ஐயோ, அரிசி கிடக்கிறது அதனை எடுத்து எமது பிள்ளைகளின் பசியைத் தீர்க்கலாமே என்று பக்கத்தில் இருந்த சில பேர் அந்த அரிசியை எடுக்க முற்படுகிறார்கள். அவர்கள் மீதும் வெடி வீழ்ந்து இறந்து போகிறார்கள். அரிசி அவர்களுக்கு வாய்க்கரிசியாகி விடுகிறது.

இப்படிப்பட்ட துயரங்களையெல்லாம் எமது மக்கள் அனுபவித்திருக்கிறார்களே என்று என்ன கவிதை உள்ளம் கஷ்டப்படுகிறது. எங்களுக்கு அழக்கூட உரிமையில்லையா, துயரத்தைச் சொல்லக் கூட வலிமையில்லையா, இந்த மக்களை மெல்ல மெல்ல துயரத்தில் இருந்தும் கண்ணீரில் இருந்தும் மீட்டுெக்கின்ற கடமை சர்வதேசத்திற்கும், இந்த மண்ணுக்கும் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.

நீங்கள் மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகிறோம். எந்த யுத்தத்திற்கு பிறகும் மனிதர்கள் நம்பிக்கையிழந்து விடக் கூடாது. வாழ வேண்டும். உழகை்க முடியும் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹிரோசிமாவை விடவா? அமெரிக்கா ஜப்பானுக்கு ஒரு தகவல் அனுப்பியது. குண்டு போடப் போகிறோம் சரணடைய முயுமா, முடியாதா என்று ஒரு கேள்வி. ஜப்பானியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இப்போதுதான் மெல்ல மெல்ல ஆங்கிலம் படிக்கிறார்கள். அப்போது ஆங்கிலம் தெரியாது. சரணடைவதா அல்லது இல்லையா. அதற்கு ஜப்பான் உங்களது கோரிக்கையை ​நாங்கள் பரிசீலிக்கிறோம் என்று ஒரு தகவலை அனுப்பியது தனது மொழியில்.

ஆனால் அமெரிக்காவில் மொழி பெயர்ப்பவன் உங்களது கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று பிழையாக மொழிபெயர்த்து விட்டான்.

நிராகரிக்கிறோம் என்ற ஒரு வார்த்தைக்காக அமெரிக்காவின் வெடிகுண்டு பறவைகள் ஹிரோசிமா மீது மழை பொழிந்தன. நச்சு மழை பொழிந்தன. நதி தீப்பிடித்து எரிந்தது. குளங்கள் தீப்பிடித்து எரிந்தன. உயிர்கள் கொல்லப்பட்ன அந்த ஹிரோசிமாவில். இன்று அந்த ஹிரோசிமாதான் பொருளாதாரத்தை கட்டிழுெப்பக் கூடிய இடத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்களும் எழுந்து நிற்க வேண்டும். கியூபா, வியட்நாம் இந்த நாடுகளுக்குப் பிறகாவது நாம் எமது நம்பிக்கையை இழந்து விடக் கூடாது என்று கற்றுக் கொள்ள வேண்டும். எல்லா இடத்திலிருந்தும் ஒரு வாழ்க்கை முளைக்கிறது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். இலவு காத்த கிளி பழமொழியொன்று இருக்கிறது. ஒரு கிளிக்கு பசித்தது. அது மாங்காயொன்றைப் பாதுகாத்தது. மாங்காய் பழுத்ததும் சாப்பிடலாம் என்று. மங்காய் பழுத்தது. கிளியும் அதை சாப்பிட்டது. ஒரு கிளி வாழைக்காயை காத்து நின்றது. வாழைப்பழம் பழுத்தது உண்டது. ஒரு கிளி இலவங்காயை காத்து நின்றது. இலவங்காய் பழுக்கும் அதிலிருந்து பழம் கிடைக்கும். அதனை சாப்பிட்டு பசியாறலாம் என்று. இலவங்காயை காவல் காத்து நன்ற அந்தக்கிளிக்கு இலவம் பழம் சாப்பிட முடியுமா என்பதுதான் அந்தப் பழமொழி. எனது நண்பன் ஒருவன் எழுதினான் நானும் இலவுகாத்த கிளிதான் என்று. ஆனால் எனக்கு தலையணை செய்யும் தந்திரம் என்று சொன்னான்.

வெடித்தால் பஞ்சு வரும். பழம் வந்தால் பசியாறலாம். பஞ்சு வந்தால் தலையணை தைத்து அதனை விற்று பிழைத்துப் போவேன். நான் மெத்தை செய்து விற்றுப் பிழைத்துப் போகிறேன். ஏமாற மாட்டேன். எங்கிருந்தும் எமக்கு வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிகையை இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியிருக்கிறது.

எனவே, இந்த மண்ணில் நீங்கள் புதிய நம்பிக்கையோடு உங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மண்ணில் திருப்பித் தர முடியாதவைகள் நிறைய, திருப்பித் தர முடிந்தவை கொஞ்சம். உயிர்களை திருப்பித் தர முடியாது. புதைந்து போன உடல்களை திருப்பித் தர முடியாது. இழந்து போன வாழ்க்கையை திருப்பித் தர முடியாது. ஆனால் எமது முன்னோர்கள் விட்டுச் சென்ற நம்பிக்கையை திருப்பி பெற முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். இன்னும் வாழ்க்கை இருக்கிறது என்பதை நம்ப வேண்டும்.

எத்தனையோ கனவுகளோடு நான் இந்த மண்ணுக்கு வந்தேன். நண்பர்களுக்குத் தெரியாமல் என் கண்களை அடிக்கடி துடைத்துக் கொண்டேன். முதல் முதலில் இன உணர்வோடு, தியாக வரலாறோடு மண்ணுக்கு வருகின்ற ஒருவன் அழாமல் திரும்ப முடியாது. மண்ணை தொட்டுப் பார்க்காமல் திரும்ப முடியாது. இந்த மண்ணை தன் கைக்குட்டையினால் எடுத்துச் செல்லாமல் திரும்ப முடியாது. இந்த மண்ணைப் பார்த்து நான் வணங்குகிறேன். பெரியோரை வாழ்த்துகிறேன்.

தமிழர்களுக்கு நம்பிக்கை பெற்றுக் கொடுங்கள், கல்வியைப் பெற்றுக் கொடுஙகள், காணிகளைப் பெற்றுக் கொடுங்கள். புதிய வாழ்க்​ைகயை பெற்றுக்கொடுங்கள். அதற்கு நாங்களும் துணையிருப்போம். 

ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி தினகரன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...