அச்சுத் தமிழ் தட்டச்சு தமிழாக | தினகரன்

அச்சுத் தமிழ் தட்டச்சு தமிழாக

அச்சிடப்பட்ட விடயமொன்று, திருத்தமொன்றிற்காக அல்லது மறு பதிப்பிற்காக அவசியப்படும் வேளையில், அது கணிக் கோப்பாக காணப்படுமாயின், எமது வேலை இலகுவாக முடிந்து விடும்.

ஆனால், அவ்வாறில்லை எனின்....?

அவ்வாறான சந்தர்ப்பத்தில் உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் அவ்வேலையை இலகுபடுத்துகிறது  Text Fairy..

பத்திரிகைகளில் சஞ்சிகைகளிலோ, துண்டுப் பிரசுரங்களிலோ அல்லது புகைப்படம் ஒன்றில் அச்சிடப்பட்ட ஆவணங்களிலோ இருக்கவேண்டிய தமிழ் தட்டச்சு இலத்திரனியல் எழுத்துகளாக மாற்ற இது உதவுகிறது.

குறிப்பாக இவ்வாறான அப்ளிகேஷன்கள், பல்வேறு மொழிகளில் காணப்பட்ட போதிலும், ~டெக்ஸ்ட் பெயாரி| ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் மூலம் தமிழ் மொழியிலுள்ள எழுத்து விம்பங்களை தட்டச்சு வடிவ தமிழ் எழுத்துகளாக மாற்றிக் கொள்ள முடியும்.

அது தவிர, ஆங்கிலம், பிரஞ்சு, அறபு, தெலுங்கு, ஜப்பான் போன்ற பல்வேறு மொழிகளல் அச்சிடப்பட்ட எழுத்துகளை மீண்டும் இலத்திரனியல் தட்டச்சு எழுத்தாக, மாற்றிக்கொள்ள முடியும்.

குறித்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்.

1. உங்கள், போனில் நிறுவப்பட்ட டெக்ஸ்ட் பெயாரி அப்ளிகேஷனை திறந்து கொள்க. (தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம், குறித்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்)

2. அதன் இடது மேல் மூலையிலுள்ள அதன் பிரதான மெனுவை திறந்து Add Language என்பதை சுட்டுக.

3. தோன்றும் Manage Language எனும் பகுதியின் ஊடாக தமிழ் மொழியை தெரிவு செய்து அதனை தரவிறக்கிக் கொள்க.

இனி டெக்ஸ்ட் பெயாரி தமிழ் மொழியை இனங்காண தயாராகிவிட்டது.

 

புகைப்படங்களில், பத்திரிகைகளில் உள்ளவற்றை நேரடியாக தட்டச்சு எழுத்துகளாக பெறும் முறை

1. டெக்ஸ்ட் பெயாரி அப்ளிகேஷனில் வலது மூலையில் இருக்கும் கெமரா குறியீட்டை சுட்டுக.

2. திறக்கப்பட்ட கெமரா முலம் அச்சிடப்பட்ட எழுத்துகளை கொண்ட ஆவணத்தை புகைப்படம் எடுத்து சேமித்துக் கொள்க.

3. அப்புகைப்படத்தில் தரப்பட்டுள்ள சதுர அடைப்புச் சட்டங்களை பயன்படுத்தி எழுத்துகள் காணப்படும் பகுதியை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

4. அதன் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள அம்புக்குறி அடையாளத்தை சுட்டுவதன் மூலம் அடுத்த படிக்கு செல்லவும்.

5. தோன்றும் சிறிய சாளரத்தில், மாற்ற வேண்டிய பந்திகள் தொடராகவா, பல வரிசைகளிலா (Column) அமைந்துள்ளது என குறிப்பிடுவதுடன், குறிப்பிட்ட ஆவணம் தமிழ் மொழியில் அமைந்துள்ளது என தெரிவு செய்து Start என்பதை தெரிவு செய்க.

6. (குறித்த ஆவணம், ஒன்றுக்கு மேற்பட்ட பந்திகளை கொண்டிருக்குமாயின்) அடுத்து தோன்றும் திரையில் அதன் பந்தி ஒழுங்கு முறையை குறிப்பிட்டு, திரையின் அடிப்பகுதியிலுள்ள Start Recognition என்பதை சுட்டுக.

அதனை அடுத்து குறித்த பகுதி ஸ்கேன் செய்யப்பட்டு, அதிலுள்ள எழுத்துகள் அடையாளம் காணப்படும். சற்று நேரத்தில் குறித்த ஆவணத்தின் தட்டச்சு பிரதி கிடைத்துவிடும். ஆவணத்தின் தெளிவு, அதன் நீள - அகலத்திற்கு ஏற்ப இந்த படிமுறைக்கான நேரம் தங்கியிருக்கும்.

ஸ்மார்ட் போனில் உள்ள ஸ்கேன் செய்யப்பட்ட அல்லது ஏற்கனவே புகைப்படமாக உள்ளவற்றை தட்டச்சு எழுத்துகளாக பெறுவதற்கு,

1. குறித்த மென்பொருளை திறந்தவுடன் அதன் வலது மேல் மூலையிலுள்ள புகைப்பட குறியீட்டை சுட்டுக.

2. பின்னர் அப்புகைப்படம் காணப்படும் அமைவிடத்தை வழங்கவும்.

இனி ஏனைய படிமுறைகள் மேற்கூறப்பட்டவை போன்றே அமைந்திருக்கும்.

அத்துடன், முக்கியமான விடயம் ஒன்றை குறிப்பிட வேண்டும்.

இம்முறையின் மூலம் அச்சிடப்பட்ட ஆவணங்களில் உள்ளவற்றை மாத்திரமன்றி, நீங்கள் பயன்படுத்தும் அதே கையடக்கத் தொலைபேசியில், இணைய உலாவி ஒன்றில் தரப்பட்டுள்ள விடயமொன்றை (Print Screen அல்லது Screen Capture முறை மூலம்) புகைப்படமாக மாற்றி சேமித்து குறித்த பகுதியிலுள்ள எழுத்துகளை தட்டச்சு எழுத்துகளாக பெறமுடியும்.

சில இணையத்தளங்களில் எழுத்துகளை நேரடியாக பிரதி எடுக்க முடியாத வண்ணம் தடுக்கப்பட்டிருக்கும். எனவே குறித்த விடயத்திற்கு இம்முறையை பயன்படுத்தலாம் என்பது, உங்களுக்கான மேலதிக தகவல்.

ஆயினும் மேற்குறித்த செயற்பாடுகளின் பின்னர் பெறப்படும் தட்டச்சு பிரதி எழுத்துகள் அடையாளம் காணப்படுவதில் சில சிக்கல்கள் தோன்றலாம். ஆயினும் குறித்த ஆவணத்தை முழுவதுமாக தட்டச்சு செய்வதற்கான நேரத்திலும், அவற்றிலுள்ள எழுத்து பிழைகளை இனம் கண்டு சரி செய்வதற்கான நேரம் குறைவாகவே இருக்கும் என்பதை கருத்திற்கொள்க.

 

குறித்த மென்பொருளை தரவிறக்க  goo.gl/8eER5n

 

(றிஸ்வான் சேகு முகைதீன் - Hi டெக் பக்கத்திலிருந்து)


Add new comment

Or log in with...