உஷ்ஷ்.... படித்தவுடன் அழிக்கவும் | தினகரன்

உஷ்ஷ்.... படித்தவுடன் அழிக்கவும்

படித்தவுடன் அழித்துவிடுமாறு நாம் அனுப்பும் செய்தி ஒன்றை, தற்போது அவ்வாறு குறித்த நபரிடம் கோராமல் தானாகவே அழிக்க உதவுகின்றது ஒரு இணையத்தளம்.

சில சந்தர்ப்பத்தில் முக்கியமான அல்லது மிக இரகசியமான தகவல் ஒன்றை அனுப்ப வேண்டி நேரிடலாம். அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் பாதுகாப்புக்காக அல்லது வேறு சில காரணங்கள் கருதி, படித்த பின் அழித்துவிடுமாறு கோர வேண்டிய தேவையை ஏற்படுத்துகின்றது.

அதற்கு உங்களுக்கு உதவுகின்றது Privnote எனும் இணையத்தளம்.

இந்த தளத்தின மூலம் நாம் அனுப்பும் தகவல்கள், பெறுபவரால் படிக்கப்பட்டவுடன் உடனடியாக நீக்கப்பட்டுவிடும்.

குறிப்பிட்ட நபரால் அந்த செய்தியை மீண்டும் படிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாம் இவ்வாறு அனுப்பும் தகவல்கள் எவ்வளவு காலத்தில் (ஒரு மணித்தியாலத்தின் பின், 24 மணித்தியாலங்களுக்குப் பின், ஒரு வாரத்திற்குப் பின் அல்லது ஒரு மாதத்திற்குப் பின்) அழிந்து விட வேண்டும் என எம்மால் தீர்மானிக்கும் வசதியையும் இத்தளம் தருகின்றது.

அத்துடன் நாம் இவ்வாறு பகிரும் தகவல்களுக்கு கடவுச்சொல் ஒன்றை இடுவதன் மூலம் அதற்கு மேலும் பாதுகாப்பு வழங்குவதற்கும் இத்தளம் உதவுகின்றது.

குறித்த சந்தர்ப்பத்தின்போது, செய்தியை பெறுபவர் குறித்த கடவுச் சொல்லை உள்ளிடுவதன் மூலம், அதனை பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தளத்திலிருந்து நாம் அனுப்பும் தகவல்கள் குறித்த நபரால் பார்க்கப்பட்ட அழிக்கப்பட்டவுடன், அச்செய்தி பார்க்கப்பட்டு, நீக்கப்பட்டதனை அறிவிக்கும் வகையில் மின்னஞ்சலொன்றையும் பெற்றுக்கொள்வதற்கான வசதியையும் இத்தளம் வழங்குகின்றது.

இனி தளத்திற்கு செல்வோம். இந்த தளத்தின பிரதான இடைமுகத்தில் வழங்கப்பட்டுள்ள கட்டத்தில் நீங்கள் பகிர வேண்டிய தகவலை உள்ளீடு செய்து, Create Note என்பதை கிளிக் செய்தவுடன் குறித்த செய்திக்கான இணைய இணைப்பு வழங்கப்படும். அதனை குறித்த நபருக்கு அனுப்பிக் கொள்ளலாம். இதன்போது, குறித்த தகவல் வாசிக்கப்பட்ட பின் அழிக்கப்பட்டு விடும்.

ஆயினும், மேலே சொல்லப்பட்டது போன்று மேலதிக வசதிகளை செயற்படுத்த விரும்பினால் குறித்த செய்தியை உள்ளீடு செய்த பின், Show Options என்பதை கிளிக் செய்வதன் மூலம், அவ்வாறான மேலதிக செயற்பாடுகளுக்கு செல்லாம்.

Note Self-Destructs எனும் பகுதியிலுள்ள After Reading என்பதை தெரிவு செய்வதன் மூலம், குறித்த தகவல் படிக்கப்பட்டவுடன் அழிக்கப்படும் என்பதோடு, அதனை அடுத்து, ஒரு மணி நேரத்தில், ஒரு நாளில், ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் என காணப்படும் பல்வேறு தெரிவுகளை தெரிவு செய்வதன் மூலம் அத்தகவலுக்கான ஆயுளை தீர்மானிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் காணப்படும், Manual Password என்பதில் குறித்த செய்திக்கு கடவுச் சொல் ஒன்றை வழங்கி, அதற்கு அருகிலுள்ள கூட்டில் கடவுச்சொல்லை மேலும் ஒரு தடவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்து காணப்படும் Destruction Notification என்பதில், உங்கள் முகவரியை வழங்குவதன் மூலம், குறித்த தகவல் படிக்கப்பட்டு அழிக்கப்பட்ட விடயத்தை மின்னஞ்சல் வழியாக அறிந்து கொள்ளலாம்.

அதற்கு அருகில் காணப்படும் Reference name for the note என்பதில், குறித்த தகவலுக்கு ஒரு பெயரை வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது கட்டாயமான விடயம் அல்ல. ஆயினும் இவ்வாறு பெயர் ஒன்றை வழங்குவதன் மூலம், இவ்வாறு அதிகமான தகவல்களை அனுப்பும் சந்தர்ப்பத்தில், நாம் அனுப்பும்  தகவல் படிக்கப்பட்டு அழிக்கப்பட்டதை அறிவிக்கும் மின்ஞ்சலில் குறித்த தகவலின் பெயர் குறிப்பிடப்பட்டு, அனுப்பப்படும் என்பதால் அழிக்கப்பட்ட தகவல் யாது என அடையாளம் காணலாம் என்பதே அதன் நோக்கமாகும்.

தனிப்பட்ட மற்றும் இரகசிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும் வர்த்தக ரீதியிலான தகவல் அல்லது அறிமுகமற்ற ஒருவருடனான தனிப்பட்ட தகவலை அனுப்புவதற்கு இவ்வசதியைப் Privnote தளத்தை பயன்படுத்தலாம்.

குறித்த இணையத்தளத்தை Privnote இணையத்தளத்தை உங்கள் ஸ்மார்ட் போனிலும் பயன்படுத்தலாம் என்பதோடு, மிக சரளமான அதன் இடைமுகம், அனைவராலும் இலகுவாக பயனபடுத்திக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

 

(றிஸ்வான் சேகு முகைதீன் - Hi டெக் பக்கத்திலிருந்து)


Add new comment

Or log in with...