தெல்லிப்பழையில் 984 ஏக்கர் காணி விடுவிப்பு | தினகரன்

தெல்லிப்பழையில் 984 ஏக்கர் காணி விடுவிப்பு

2050 குடும்பங்களை மீள்குடியேற்ற அரசு முடிவு

வடக்கில் வதை முகாம்கள் இல்லை-- இராணுவப் பேச்சாளர்

யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றத்திற்கு அடையாளம் காணப்பட்ட இடங்களை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் படி தெல்லிப்பழை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 5840 ஏக்கர் காணியில் 984 ஏக்கர் காணியை விடுவித்து 2050 குடும்பங்களை அங்கு மீள்குடியேற்ற இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்பும் போது. மோதல்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவது முக்கிய அம்சமாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது சொந்த இடங்கள் விடுவிக்கப்படாததால் யாழ். மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு மக்கள் இன்னும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இதன்படி மேற்படி குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள இடங்களில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் அந்த மக்களை கட்டம் கட்டமாக மீள் குடியேற்ற அமைச்சர் டீ. எம். சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கமைய, யாழ். மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள இடங்களில் மக்களை மீள்குடியேற்றும் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக தெல்லிப்பழையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 984 ஏக்கர் காணி விடுவிக்கப்படும்.

இதேவேளை யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இரு வதை முகாம்கள் செயற்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த இராணுவ பேச்சாளர்,

மருத்துவ கண்காணிப்பு அறையொன்றே இங்கு இயங்கி வந்தது. புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்த இடம் முட் கம்பிகளால் அடைக்கப்பட்டிருந்ததோடு வேறு பாதுகாப்பு ஒழுங்குகளும் இங்கு செய்யப்பட்டிருந்தன. பலாலி முகாமிற்கு புலிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் காணப்பட்டது. இதனாலே இந்த கண்காணிப்பு அறைக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து அறியாமல் இங்கு வதை முகாம் இருந்ததாக பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இதனை நிராகரிக்கிறேன். 

எம். எஸ். பாஹிம்


Add new comment

Or log in with...