சட்டவிரோத மீன்பிடி; தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்

நேற்று (04) மாலை இலங்கையின் கச்தைத்தீவு கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் 08 தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் அவர்கள் கடற்றொழிலுக்கு பயன்படுத்திய படகு இரண்டினையும் கைற்றியிருந்தனர்.
 
குறித்த 8 பேரையும் எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் மாவட்ட நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா இன்று (05) உத்தரவிட்டார்.
 
இன்று (05) மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது குறித்த உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.
 
இதேவேளை மற்றுமொரு படகில் வந்த தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தைச் சேரந்த மீனவர்கள் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.
 
இவர்கள், காரைநகர் வடக்கு கடற்பரப்பில் நேற்று (04) இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் மேலும் கூறினார்.
 
 
(மன்னார் நிருபர் மார்க் ஆனந்த், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் சுமித்தி தங்கராசா)

Add new comment

Or log in with...