எரிபொருள் விலைச்சூத்திரம் பணிகள் பூர்த்தி; விரைவில் அமுல்

எரிபொருள்களுக்கான புதிய விலைச் சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இந்த விலைச் சூத்திரத்தை தயாரிக்கும் இறுதிப்பணிகள் பூர்த்தியடைந்திருப்பதாகவும், கூடிய விரைவில் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைந்துள்ளபோதும் எரிபொருள்களுக்கான விலைச் சூத்திரத்தை அரசாங்கம் இன்னமும் நடமுறைப்படுத்தாததால் மக்களுக்கு நேரடியான பயன் கிடைப்பதில்லையென ஜே.வி.பியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.  

ஒரு லீற்றர் பெற்றோலை 95 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் டீசலை 79 ரூபாவுக்கும் வழங்க முடியுமாக இருந்தபோதும், விலைச் சூத்திரம் இன்மையால் அதிகவிலைக்கு அரசாங்கம் வழங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் பெற்றோலியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி, உத்தேசிக்கப்பட்டிருக்கும் எரிபொருள் விலைச் சூத்திரத்தை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும், கூடிய விரைவில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.

விலைச்சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் மக்களுக்கு முழுமையான பலனையும் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

 


Add new comment

Or log in with...