திரையுலகினருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் நடிகை அசின் | தினகரன்


திரையுலகினருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் நடிகை அசின்

திருமணம் ஜனவரி 23 ஆம் திகதி ; சினிமாவை விட்டு விலக முடிவு

நடிகை அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார். இவர்கள் திருமணம் ஜனவரி 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு அசின் விலகுகிறார்.

ஜெயம் ரவி ஜோடியாக எம்.குமரன் சன் அப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அசின். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், விக்ரம், சுூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அசின் நடித்த கஜினி படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் அமீர்கான் நடிக்க இந்தியில் மொழிமாற்றம் செய்தபோது அதிலும் அசினே நடித்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் இந்தி திரையுலகிலும் கலக்கினார்.

சல்மான்கான், அக்ஷய்குமார், அபிஷேக்பச்சன், அஜய் தேவ்கான், ஜான் ஆபிரகாம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இந்த நிலையில் அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் கையடக்கத்தொலைபேசி நிறுவன உரிமையாளர் ராகுல் சர்மாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அவர்கள் பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர்.

கடந்த நவம்பர் 26ஆம் திகதி இவர்கள் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போது திருமணத்தை நடத்தாமல் தள்ளி வைத்து விட்டனர். திருமண திகதியையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 23 ஆம் திகதி திருமணத்தை நடத்த தற்போது முடிவு செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் அசின்– ராகுல் சர்மா திருமணம நடைபெறவுள்ளது. மும்பையில் திருமண வரவேற்பை நடத்துகிறார்கள். திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு நடிகர்- நடிகைகள் மற்றும் உறவினர்களுக்கு விநியோகித்து வருகிறார்கள். திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக அசின் திட்டமிட்டு உள்ளார். தற்போது புதுப்படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை.  


Add new comment

Or log in with...