எரிபொருள் விலை குறைப்பை மக்கள் அனுபவிக்க வேண்டும் | தினகரன்

எரிபொருள் விலை குறைப்பை மக்கள் அனுபவிக்க வேண்டும்

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ளபோதிலும் அதன் பலன், இன்னும் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
 
இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
 
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில், உலக சந்தையில் நிலவிய கச்சா எண்ணெயின் விலையிலும் பார்க்க, இன்று அதன் விலை மிக அதிகளவில் குறைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
 
கடந்த இரு மாதங்களில் கச்சா எண்ணெயின் விலையில் அதிக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதமளவில் கச்சா எண்ணெய் பீப்பா ஒன்று 51 டொலராக (ரூபா 7,326.40) இருந்தது; ஆனால் இன்று அதன் விலை 36.38 டொலராக  (ரூபா 5,226.17) காணப்படுகின்றது என அவர் சுட்டிக் காட்டினார்.
 
அத்துடன் கடந்த 2007 ஆம் ஆண்டில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்கும் நோக்கில், சப்புகஸ்கந்தையில் ஜனாதிபதி தலைமையில் விழா முன்னெடுக்கப்பட்டு அடிக்கல் ஒன்று நடப்பட்டது. ஆயினும் இன்று வரை குறித்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை என்பதோடு, குறித்த அடிக்கல்லை கூட காணமுடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
 
இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் என்பவற்றுக்கு பதிலாக, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, அதனை எமது நாட்டிலேயே சுத்திகரிப்பதன் மூலம், செலவை இன்னும் குறைக்கலாம் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Add new comment

Or log in with...