வெலிக்கடை சிறையில் இராணுவ அதிகாரிகளுடன் மஹிந்த சந்திப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 5 இராணுவ வீரர்களையும் முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷநேற்று(22) நேரில் சென்று பார்வையிட்டதாக அவரது ஊடகப்பிரிவுதெரிவித்துள்ளது

கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் இருவர் லெப்டினன்கள், மற்றும் மூவர் சாஜன்களாவர்.இவர்கள் யுத்த காலத்தில் இராணுவ புலனாய்வு சேவைகளை வழங்கியதாக தெரியவருகிறது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்தபோது பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டார். ஜனவரி 8ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் எக்னலிகொட காணாமல்போனமை தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, இந்த ஐந்து இராணுவ வீரர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

அது தொடர்பான விசாரணைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலைக்குச் சென்று அவர்களைப் பார்வையிட்டுள்ளார். தானும் சட்டத்தரணி என்ற ரீதியில் எவர் மீதும் குற்றஞ்சாட்ட விரும்பவில்லையென்றும், நீதியான முறையில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்ற நம்பிக்ைக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் முன்னாள் அரசாங்கமும் விசாரணைகளை நடத்தியிருந்ததாகவும், ஆனால் தாம் எவரையும் சாட்சியமின்றி கைதுசெய்யவில்லையென்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, சிறைச்சாலைக்கு வெளியே கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறித்த இராணுவ வீரர்களை சென்று சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...