இரு மாதங்களில் ஓய்வு - மெக்கலம்

நியூசிலாந்து அணியின் தலைவர் பிரண்டன் மெக்கலம் இன்னும் இரு மாதங்களில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார்.
 
2016, பெப்ரவரியில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரே இவரது இறுதி சர்வதேச கிரிக்கெட் தொடராக அமையவுள்ளது. 
 
குறித்த தொடரின், முதலாவது டெஸ்ட் போட்டி மெக்கலத்தின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
எனவே மார்ச் 08 இல் டி20 உலகக்கிண்ணத்தில் பங்குபற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காது என்பது துரதிஷ்டவசமான ஒன்றாகும்.
 
34 வயதான மெக்கலம், 2004 இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார்.
 
99 டெஸ்ட் போட்டிகளில் 6,273 ஓட்டங்களை பெற்றுள்ளார். இது நியூஸிலாந்து அணி சார்பாக பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாகும். இதில் 11 சதங்கள் உள்ளடங்குகின்றன.
 
254 ஒருநாள் போட்டிகளில் 31 சதங்கள் உள்டங்கலாக 5,909 ஓட்டங்களையும், சர்வதேச 71 ரி20 போட்டிகளில் 2 சதங்கள் உள்ளடங்கலாக 2,140 ஓட்டங்களை மெக்கலம் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
தனது ஓய்வு குறித்து கருத்து தெரவித்த மெக்கலம் "எனது அணிக்காக விளையாடியமை மற்றும் தலைமைத்துவம் வழங்கியமை தொடர்பில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அனைத்து நல்ல விடயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. நான் பெற்ற அனுபவங்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்தார்.
 
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசியவர்கள் வரிசையில் கில்கிறிஸ்டுடன் மெக்கலமும் முதலாவது இடத்தைப் பகிர்ந்துள்ள நிலையில் மேலதிகமாக ஒரு சிக்ஸரை விளாசும் நிலையில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் எனும் சாதனையை தன் வசப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலுள்ள கேன் வில்லியம்சனுக்கு நியூசிலாந்து அணியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
ஆயினும் தனது ஓய்வினை அடுத்து ஐ.பி.எல். மற்றும் பிக் பேஷ் போட்டி தொடர்களில் பங்குபற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...