தேர்தலில் தனித்து நிற்க தோழமை கட்சிகள் முயற்சி

கட்சியைக் காட்டிக் கொடுக்கும் செயலென  அமைச்சர் ஆட்சேபம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனியாக போட்டியிட சில ஐ. ம. சு. மு. கூட்டு கட்சியினர் முயல்கின்றனர். தனித்துப் போட்டியிட்டு ஒரு உள்ளூராட்சி தொகுதியையாவது வென்று காட்டுமாறு மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா சவால் விட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாக தம்மை வளர்த்துக்கொள்வதே இவர்களின் நோக்கம் என்று தெரிவித்த அவர், சு. க. இரண்டாக பிளவுபடுவதன் நன்மை ஐ. தே. க.வையே சென்றடையும் எனவும் அதனை தான் இவர்கள் விரும்புகின்றனரா எனவும் கேள்வி எழுப்பினார். ஹோமாகம, பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஐ. ம. சு. மு. விலுள்ள சில கட்சிகள் சு. க.வினாலே வளர்ச்சி பெற்றன. இதனால் சு. க. ஆதரவாளர்களுக்கே அநீதி ஏற்பட்டது. சு. க. மூலம் தம்மை வளர்த்துக்கொண்டவர்கள் இன்று தனித்துப் போட்டியிட முயல்கின்றனர். சு. க. உடைவதன் பயன் ஐ. தே. க.விற்கே செல்லும்.

சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் சு. க.வில் இருந்தே உருவானார்கள். அவர்கள் சு. க. மீது அன்பு செலுத்துகின்றனர். அவர்கள் ஒருபோதும் கட்சியை உடைக்க உதவவில்லை என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஹோமாகம பிரதேச சபை முன்னாள் தலைவர் இந்திக கோரளகே,

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மோசடி செய்வது குறித்து முதலில் கூறியது ஐ. தே. க. அன்றி ஐ. ம. சு. மு. கட்சி தலைவர்களே, ஐ. தே. க.வுக்கு கோசங்கள் தயாரி்த்து கொடுத்தது இவர்களே. இவர்கள் தான் இன்று உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து பேசுகின்றனர் என்றார்.

எம். எஸ். பாஹிம்  

 


Add new comment

Or log in with...