தாஜுதீனின் உடலுறுப்புகள் மாயம்

 கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அலுவலக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் உடலுறுப்புகள் மாயமாக மறைந்தமைக்கு தான் எந்த நிலையிலும் சம்பந்தப்படவில்லை என முன்னாள் கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியான பேராசிரியர் ஆனந்த சமர சேக்கர நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி நிசாந்த பீரிஸ் முன்னிலையில் தெளிவுபடுத்தினார்.

2012 மே 17ம் திகதி முதல் தான் ஓய்வுபெற்ற 2013 ஜூன் 3ஆம் திகதி வரை அந்த உடலுறுப்புகள் பிரேத அறையில் பாதுகாப்பாக இருந்ததாகவும் அதன்பின்னர் அவற்றில் சில பகுதிகள் காணாமல்போய் அல்லது அழிக்கப்பட்டோ, இல்லாவிட்டால் பிறிதொரு தரப்பினால் இரகசியமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என தான் கண்டறிந்ததாகவும் தெரிவித்த சமரசேகர, அப்படி எதுவும் நடந்திருக்காவிடின் உடல் உறுப்புகள் அங்கேயே இருந்திருக்கவேண்டுமெனவும் எழுத்து மூலம் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார்.

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பான வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேலதிக நீதிவான் திஸாந்த பீரிஸ் முன்னிலையில் இடம்பெற்றபோதே வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர மேற்கண்டவாறு அறிக்கை மூலம் தெறிவுபடுத்தியுள்ளார். 2012ல் தான் குறித்த மரணம் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு சில உடலுறுப்புகளின் எலும்புகளை குளிரூட்டியில் வைத்து பாதுகாக்குமாறு பணிப்புரை விடுத்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் 2013 ஜூன் 3ஆம் திகதி தான் ஓய்வு பெற்றதாகவும் அதன் பின்னர் இந்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விடயத்தில் தனக்கு எதுவும் தெரியாதெனவும் அவற்றுடன் தான் சம்பந்தப்படவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

வழக்கு விசாரணைக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய உடலுறுப்புகளின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆனந்த சமரசேகர அவற்றில் சில உறுப்புகளே மாயமாக மறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

2012 மே மாதத்தில் கொழும்பு நாரஹேன்பிட்டி சாலிகா விளையாட்டு மைதானத்துக்கருகில் காருக்குள் தீக்காயங்களுடன் மரணமான வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாகவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய நீதிமன்றம் விடுத்த அழைப்பானணக்கமையவே முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேக்கர இந்த பகிரங்க அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தார். இந்த வழக்கு விசாரணையை இன்று புதன்கிழமை வரை மேலதிக நீதவான் திசாந்த பீரிஸ் ஒத்திவைத்தார். 


Add new comment

Or log in with...