முதலாவது வாகனம் 5 வருடங்களுக்கு பின்னர்

அரசாங்க ஊழியர்களின் வரிச் சலுகை வாகனக் கொள்வனவின் முதலாவது வாகனத்தை 5 வருட பூர்த்தியின் பின்னர் பெறலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தினால் ஒரு சில மாற்றம் கொண்டு வரப்பட்டதாக இன்று (09) ஶ்ரீ.ல.சு.க.வின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார்.
 
அரசாங்க ஊழியர்கள் வரிச் சலுகை அடிப்படையிலான வாகனத்தை கொள்வனவு செய்ய, அவர்கள் 10 வருடங்கள் சேவையில் ஈடுபட வேண்டுமெனும் பிழையான கருத்துகள் மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
 
அது அவ்வாறில்லை என தெரிவித்த அமைச்சர், இது குறித்தான ஏற்கனவே இருந்த சட்டதிட்டங்களில் மேலதிக மாற்றமும் இல்லை எனவும், 5 வருட சேவையை பூர்த்தி செய்தவர்களுக்கு முதலாவது வரிச் சலுகை வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் அதன் பின்னர் 10 வருடங்களில் அடுத்த வரிச்சலுகை வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
 
மேலும் குறித்த அனுமதிப்பத்திரத்தை, அனைத்து பொதுச் சேவையிலுள்ள சிரேஷ்ட ஊழியர்கள் மற்றும் குறித்த துறைசார்ந்த அரச சேவையாளர்களாள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, வரவு செலவுத் திட்டத்தில் வரிச் சலுகை கொண்ட வாகன கொள்வனவு அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய வேண்டுமென முன்மொழியப்பட்ட போதிலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமையை அடுத்து, வாகன கொள்வனவின் போது ரூபா 10 இலட்சம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
 
ஆயினும், மருத்துவ அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டத்தை அடுத்து 10 வருடங்களுக்கு ஒரு முறை, இரு வரிச் சலுகை கொண்ட வாகன கொள்வனவு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Add new comment

Or log in with...