விக்கினம் விலக்கும் விநாயகர் விரதம்

இன்று ஆரம்பம்

உலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம் பொருளும் ஓங்காரத்தின் உட்பொருளுமான விநாயகப் பெருமானுடைய விரதம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. அடியாளர்களின் விக்கினங்களையெல்லாம் விலக்கித் திருவருள் சுரக்கின்ற தெய்வம் ஸ்ரீ விநாயகப் பெருமானேயாவார்.

அவருடைய தோற்றமே தெய்வீகமானது. புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த விநாயகப் பெருமானுடைய திருவருளைப் பெற்றுய்வதற்கு வழிகாட்டுகின்ற புண்ணிய விரதம் இந்தப் பெருங்கதை விரதமே விநாயகரின் பெருமையை எடுத்தியம்புகின்ற பெருங்கதைப் பூசை இன்று ஆரம்பமாகி இருபத்தொரு நாள்களுக்குத் தொடர்ந்து இடம்பெறவிருக்கின்றது.

இந்த அரிய பெரிய விநாயகருக்குரிய பெருங் கதைப்பூசை விநாயகர் எழுந்தருளி வீற்றிருந்து அருள்பாலிக்கும் புனித தலங்களில் மிக விமரிசையாக இன்று முதல் இடம்பெறவிருக்கின்றது.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தனிப்பெருந் தெய்வமான விநாயகப் பெருமானுடைய திவ்ய பெருங்கதை, அவருடைய வரலாற்றை விளக்கி நிற்பதோடு விநாயகரின் பெருமையையும் அவர் அருள் பெற்றவர்களின் தன்னிகரற்ற புண்ணிய பேற்றினையும் உரைத்து அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட நிகழ்வு பற்றிய விபரங்களையும் தெளிவாக எடுத்தியம்பி நிற்கின்றது.

விக்கினங்களையெல்லாம் நீக்கியருள்கின்ற அருட் தெற்கமான ஸ்ரீ விநாயகப் பெருமானுடைய பெருங்கதையை சைவசமயிகள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.

 இன்று தொடக்கம் இந்தப் பெருங்கதையானது விநாயகர் கோவில்களில் வெகு விமரிசையாகவும பக்தி பூர்வமாகவும் அடியார்களால் படிக்கப்படும்.

இந்தப் பெருங்கதையைப் படிப்பவர்களும் அருகிருந்து கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செளபாக்கியங்களும் கைவரப் பெற்று எல்லா நன்மைகளையும் அடைந்து செல்வச் செழிப்போடும் சீரோடுஞ் சிறப்போடும் நல்லபடி வாழ்ந்து இறையருளை நுகர்வர் என்று சொல்லப்படுகின்றது.

இத்தகைய சிறப்புமிக திவ்ய அருள் தரும் பெருங்கதைப் படிப்பு எமது சைவப் பாரம்பரியத்தையும் கோட்பாடுகளையும் விளக்கும் வகையில் அமைந்து நற்பயன் தருவதோடு விநாயகப் பெருமானுடைய அருள் சுரக்கும் ஆனந்தமளிக்கும் அருள் விரதமாகவும் காணப்படுகிறது.

இதை அனுட்டிக்க விரும்புவோர் காலையில் எழுந்து கணபதியைக் கைதொழுது அவர் நினைப்புடனே புனித புண்ணிய நீராடி சந்தியாவந்தனம் முடித்துத் தீட்சை வைத்து அருகிலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்குப் போய், ஆலயக் குருக்களிடம் தர்ப்பை வாங்கி சங்கற்பஞ் செய்துகொள்ள வேண்டும்.

அதைத் தொடர்ந்து கோயிலில் நிகழ்கின்ற பூசை வழிபாடுகளில் பங்குபற்றிச் சுவாமி தரிசனஞ் செய்து பெருங்கதைப் படிப்பில் பக்தி வினயத்தோடு கலந்துகொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து இருபத்தொரு நாளும் விரதங் காக்க வேண்டும்.

முடியுமாயின் முழுநாளும் உபவாசமிருந்து தினமும் மாலையில் இறைவழிபாடியற்றிய பின் பால், பழம் இவற்றோடு சிறிதளவு உணவு உட்கொள்ளலாம். இது முடியாதவர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி தரிசனம் செய்து விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து மதியம் மட்டும் உணவெடுத்து விரதம் நோற்கலாம்.

முழுப் பலனும் பெறுவதாயின் உணவேதுமின்றி நீராகாரம் மட்டும் எடுத்து கண்டிப்புடன் கைதொழுதல் வேண்டும். இந்த விரதத்தை முறையாக விதிப்படி நோற்றால் பரிபூரண கிருபாகடாட்சம் கிட்டும்.

தனக்கு மேல் வேறொரு தலைவர் இல்லாதபடியால் இவருக்கு விநாயகர் என்று பெயர் “வி” என்றால் மேலான, நாயகர் என்றால் தலைவர். விக்கினங்களையெல்லாம் களைபவர் ஆனபடியால் விக்கினேஸ்வரர் எனப்பட்டார்.

மேலும் கணங்களுக்கெல்லாம் ஈசனாகையால் கணேசன் என்றும் கணங்கள் யாவற்றுகும் பதியாக விளங்கும் தன்மையால் கணபதி என்றும் யானை முகத்தைக் கொண்டவராதலால் ஆனைமுகன், கரிமுகன், கஜமுகன் என்றும் அழைக்கப்படுகின்ற இவர் முதல் வணக்கத்துக்குரியவர்.

நாங்கள் எந்தக் காரியம் தொடங்கினாலும் முதலில் விநாயகப் பெருமானை வணங்கித்தான் ஆரம்பிக்கின்றோம். ஏனெனில் காரியங்களைச் சிந்திக்கச் செய்கின்ற தன்மையையுடையவர் விநாயகரே. அதனால் தான் அவருக்கு சித்திவிநாயகர் என்று பெயர். அவரை நாம் சிந்தித்து வந்தித்துச் சேவிக்க வேண்டும்.

பிள்ளையாரின் பெருங்கதைப் படிப்பின் போது பல்வேறு நிகழ்வுகள் பற்றிக் விடயங்கள் அழகாகக் கூறப்படுகின்றன. இதிகாசங்களிற் சிறந்ததாக விளங்குகின்ற அரிய பெரிய மகாபாரதக் கதையினை எழுதியவரும் விநாயகரேயாவார். அவரின் பெருமை சொல்லிமுடியாது.

விநாயகரின் பெருங்கதைப் படிப்பு மிகவும் நல்ல பயன்தருகின்ற ஒரு புனித புண்ணிய நிகழ்வாகும், இந்தப் பெருங்கதைப் படிப்பானது விநாயகர் கோயில்களில் மிகப் புனிதமாக வைத்துச் செய்யப்படும்.

இந்தப் பெருங்கதை நோன்பை முறையாக அனுட்டித்து விநாயப் பெருமானின் அருள்பெற்று பூவுலகில் சகல செளபாக்கியங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வழி சமைப்போமாக.

தெய்வத் தமிழ்ச் சுடர் இராசையா ஸ்ரீதரன்


Add new comment

Or log in with...