2020 இல் நிறைவேறும் நிறைவேற்று அதிகார ஒழிப்பு | தினகரன்

2020 இல் நிறைவேறும் நிறைவேற்று அதிகார ஒழிப்பு

நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி முறை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிலேயே ஒழிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
 
இன்று (18) பிற்பகல், ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
வரலாற்றில் முதன் முறையாக, பதவியில் இருக்கும்போதே தனது அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனும் வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் தெரிவித்தார்.
 
தற்போது பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி நிறைவடைந்ததை அடுத்தே தற்போதுள்ள ஜனாதிபதி முறை மாற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
 
இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்காக முன்வைத்த யோசனைக்கும், புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கும் அமைச்சரவை இன்று (18) அனுமதி வழங்கியுள்ளதோடு, அதற்கு ஶ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழுவும் நேற்றைய தினம் (17) அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...