இலங்கைக்கு மீண்டும் GSP+

பல்வேறு காரணங்களில் கடந்த அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காமையினால் நீக்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நல்லாட்சி, நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிய இலங்கை எனும் நோக்கத்துடன் செயற்படும் இலங்கை அரசிற்கு உதவுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தினால், ஐரோப்பிய சபையின் அங்கத்துவ பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வமாக நேற்று (16) தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து இலங்கையில், ஊழலை ஒழிப்பதற்கும், மனித உரிமைகளை பேணுவதற்கும், நீதியின் ஆதிபத்யத்தை உறுதி செய்வதற்கும் மேலும் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி கவனம் செலுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தியமையானது, ஐரோப்பிய சங்கத்தின் பாராட்டைப் பெறுவதற்கு காரணமாக அமைந்ததாக ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
விசேடமாக இலங்கையில் சமாதானம், ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கில் சிவில் ஆட்சியை மீண்டும் அமைத்தல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டோரை விடுதலை செய்தல் போன்ற விடயங்களை மேற்கொள்வதன் மூலம், மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புதற்கு நடவடிக்கை எடுத்தமையானது, புதிய அரசின் மிகச் சிறப்பான நடவடிக்கைகள் என, தாங்கள் நம்புவதாக ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்கும் நாடுகளில், மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்பதோடு, இலங்கையில் அவ்வாறான நிலை தோன்றியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
 
மேலும், மீன் ஏற்றுமதி தொடர்பில் இலங்கை மீது ஐரோப்பாவில் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவையும் நீக்கமுடியும் என ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
இந்திய பெருங்கடலில் டூனா ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு அமைய, இலங்கை இயங்குவதாகவும், மீன் ஏற்றுமதியில், சட்ட வரைமுறைகளுக்கு இணங்க, இலங்கை செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளமையானது அத்தடைகளை நீக்குவதற்கு வழிகோலும் என தெரிவித்துள்ளது.

Add new comment

Or log in with...