கே.பிக்கு குற்றத்தில் எவ்வித பங்குமில்லை

விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர் என கூறப்படுபவரும் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தருமான 'கே.பி' என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இது வரை இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் எவ்வித தீவிரவாத நடவடிக்கைகளிலோ, குற்றத்திலோ சம்பந்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
மேன்மேறையீட்டு நீதிமன்றில் இன்று (12) அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளனர்.
 
பொலிஸ் தலைமையகத்தின் உதவி பொலி அத்தியட்சகரும் தீவிரவாத விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரியுமான எம்.ஏ.எம். நவாஸினால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையை, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
 
கே.பி'யை கைது செய்யுமாறு ஜே.வி.பி, எம்.பி விஜித ஹேரத்தினால் முன்வைக்கப்பட்ட மனு இன்றையதினம் (12) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வறிக்கை முன்வைக்கப்பட்டது.
 
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், விஜித் மலல்கொடவின் முன்னிலையில் எடுக்கப்பட்ட குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மாஅதிபர், சட்ட மாஅதிபர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொள்ளை, கொலை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தேடப்படும் சந்தேகநபராக பத்மநாதன் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ள குறித்த பொலிஸ் அறிக்கையில், மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபருக்கு பதிலாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.
 
இதனை கருத்திற் கொண்ட நீதிமன்றம், நாட்டை விட்டு செல்வதற்கு கே.பிக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி வரை நீடிப்பதாக தெரிவித்ததோடு, அவர் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

Add new comment

Or log in with...