சிகிச்சை பெற அனுமதி தரவும் - துமிந்த சில்வா

துப்பாக்கிச் சூட்டின் காரணமாக தனக்கு ஏற்பட்டுள்ள காயத்திற்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சிங்கப்பூர் செல்ல நீதிமன்றத்திடம் அனுமதி தருமாறு கோரியுள்ளார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா.
 
பாரத லக்ஸ்மன் வழக்கு சம்பந்தப்பட்ட மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில், ஜனாதிபதி வழக்கறிஞர் அனில் சில்வா, இவ்விடயம் குறித்து இன்று (28) நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார்.
 
துமிந்த சில்வா இவ்வாறு சிகிச்சை பெறுவதற்காக ஏற்கனவே 05 முறை சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவித்துள்ள அவரது வழக்கறிஞர், குறித்த துப்பாக்கிச் சூட்டு காயம் மிகவும் மோசமான ஒன்றாகும் எனவும் அதற்காக 06 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
இதன்போது, அனில் சில்வாவினால், துமிந்த சில்வா, சிகிச்சை பெற்றுக்கொண்ட சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத்  மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் 'கித் ஹோ'வின் கடிதமொன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
அதன்படி எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதியிலிருந்து இரு வாரங்களுக்கு, குறித்த மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை தருமாறு கோரியதுடன், அவர் இன்றி இவ்வழக்கை தொடர்வதில் எவ்வித சிக்கலும் இல்லை என சுட்டிக்காட்டினார்.
 
குறித்த வேண்டுகோளை கருத்திற் கொண்ட, ஷிரான் குணரத்ன (தலைவர்), பத்மினி ரணவக குணதிலக, எம்.பி.சி.எஸ். மொராயஸ் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழு, இது குறித்து எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தது.

Add new comment

Or log in with...