கூட்டுக் கண்காணிப்பு மூலம் மீனவர் அத்துமீறலை தடுக்கலாம் | தினகரன்

கூட்டுக் கண்காணிப்பு மூலம் மீனவர் அத்துமீறலை தடுக்கலாம்

மத்திய அரசுடன் மட்டுமல்ல தமிழக அரசுடனும் இலங்கை பேச வேண்டும்

இந்திய மீனவரின் ~பொட்டம் ரோலிங்' முறையால் வடபகுதி மீனவர்கள் கடும் பாதிப்பு

மீனவர் விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் மாத்திரமன்றி தமிழக அரசாங்கத்துடனும் வெளிவிவகார அமைச்சு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

இலங்கை, இந்திய மத்திய அரசு, தமிழக அரசு அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக ளை நடத்தும் அதேநேரம் இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை, இந்திய கரையோர பாதுகாப்பு படை ஆகியன இணைந்து கூட்டு கண்காணிப்பை நடத்துவதன் மூலம் அத்துமீறல்களை தடுக்க முடியும் என்றும் கூறினார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இந்திய மீனவர் பிரச்சினை நீண்டகாலமாக காணப்படு கிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசாங்கம் உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும்.

 இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது சட்டத்தை மீறும் செயற்பாடாகும். இதனால் வட பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி இந்திய மீனவர்களின் பொட்டம் ட்ரோலிங் முறையால் கடல் வளம் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துமீறிய மீன்பிடியை தடுக்க இரு நாட்டு கடற்படையினர் மற்றும் கரையோரப் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து கூட்டு கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இதனால் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியும். அதேநேரம், மீனவர் விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு, டெல்லியிலுள்ள மத்திய அரசாங்கத்துடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தாது, பிராந்திய அரசான தமிழ்நாட்டு அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முத்தரப்பு பேச்சுக்களை நடத்தி இவ்விடயத்துக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான உதவிகளை செய்ய முடியும் என இந்திய மத்திய அரசாங்கம் ஏற்கனவே கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா

மீனவர் பிரச்சினைக்கு இந்திய தரப்பினால் முன் வைக்கப்படும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பொருளாதார மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்வேறு மட்டங்களில் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.

பேச்சுக்களின் போது இந்திய மீனவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போது பயன்படுத்தும் மீன்பிடி முறையை மாற்றும் வரை 3 வருடங்களுக்கு இவ்வாறே மீன்பிடிகை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்ற நிபந்தனைகளை அவர்கள் முன்வைத்தனர். இதனை ஏற்க முடியாது.

இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதில் அரசாங்கம் அக்கறையுடன் உள்ளது. இதனை தீர்ப்பதற்கு சகல தரப்பினரின் ஒத்துழைப்பையும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. எமது கடல் எல்லையை பாதுகாக்க கடற்படையினர் முழுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 


There is 1 Comment

படம் காட்டுறவன் இருக்கிற வரை படம் ஓட்டுறவனும் இருக்கத்தான் செய்வான்.. அரசியல் எண்டு வந்திட்டா, நாய் மூத்திரத்தையும் ஹோமியம் எண்டு சொல்லி கொடுப்பானுங்க

Add new comment

Or log in with...