பெரிய வெங்காய இறக்குமதி வரி அதிகரிப்பு | தினகரன்

பெரிய வெங்காய இறக்குமதி வரி அதிகரிப்பு

உள்நாட்டில் தற்போது பெரிய வெங்காய அறுவடை ஆரம்பித்திருப்பதன் காரணமாகவும் அது தற்போது சந்தையை நோக்கி கொண்டுவரப்படுவதனாலும், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை கிலோ ஒன்றுக்கு ரூபா 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
உள்நாட்டிலுள்ள விவசாயிகளால் செப்டெம்பர் - ஒக்டோபர் காலப்பகுதியில் பெரிய வெங்காயம் சந்தைக்கு கொண்டு வரப்படுவதனால் அவர்களது நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
 
அதன் அடிப்படையில் இதுவரை பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு கிலோவுக்கான இறக்குமதி வரியை ரூபா 10 இலிருந்து ரூபா 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறைசேரி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
உள்நாட்டு விவசாயிகள் நலன்கருதி இவ்வாறான வரி அதிகரிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள நிதியமைச்சு, இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி வரியை கிலோவுக்கு ரூபா. 10 இனால் அதிகரித்திருந்ததோடு, தேசிய சீனி உற்பத்தியை நோக்காகக் கொண்டு இறக்குமதி செய்யும் சீனிக்காக கிலோ ஒன்றுக்கு ரூபா 12 ஆக அதிகரித்திருந்தது.
 
எவ்வாறாயினும் சீனி விற்பனை தொடர்பான சில்லறை விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதோடு, பொதி செய்யப்படும் சீனி ஒரு கிலோ ரூபா. 95 ஆகவும், பொதி செய்யப்படாத சீனி ஒரு கிலோ ரூபா 88 ஆகவும் விற்பனை செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...