யாழ் மீனவர்களின் அவலத்தை யாருமே கண்டுகொள்வதில்லை

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அடாவடித்தனம்

குமுறுகிறார் யாழ். மாவட்ட மீனவ அமைப்புக்களின் தலைவர் பொன்னம்பலம்

 

இலங்கை- இந்திய மீனவர்களிடையே எத்தனை சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறுவதனை இன்னமும் நிறுத்தவில்லை.

இந்திய மீனவர்களுக்கு அசெளகரியம் ஏற்படுமாயின் முழு உலகமே அவர்களுக்காக குரல் கொடுக்கும் நிலையில், இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் அவலத்தை எவருமே கண்டு கொள்ளாமை பெரும் வேதனையளிப்பதாக யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

“இந்திய மீனவர்கள். உலகப் பயங்கரவாதிகளை விடவும் மோசமாக நடத்துகொள்கிறார்கள். இவர்களின் அடாவடித் தனத்தால் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு மீனவர்களின் வீடுகளில் எந்தநாளும் மரண ஓலந்தான்” என்றும் பொன்னம்பலம் கூறினார்.

“பேச்சுவார்த்தை என்னும் பெயரில் நிகழ்ச்சி நிரலுக்கமைய கூடுவதும் பேசுவதும் கலைவதும் நடைபெறுகிறதே யொழிய உண்மையை எடுத்துரைக்கவோ நியாயத்தை தட்டி கேட்டக்கவோ எவரும் இருப்பதாக எமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

அதனால் இனிவரும் இலங்கை- இந்திய பேச்சுவார்த்தைகளில் யாழ். மீனவப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே 04 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் நான் பங்கெடுத்துள்ளேன். கூற வேண்டிய அனைத்தையும் நான் கூறிவிட்டேன்.

 “எல்லை தாண்டுவது சட்ட விரோதம். இந்திய மீனவர்கள் அதனை செய்யக்கூடாது” என இந்திய அரசாங்கமும் வலியுறுத்தியுள்ளது. இருந்தபோதும் பின்னர் இத்தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே, எதிர்வரும் பேச்சுவார்த்தையை பகிஷ்கரிக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தமிழ் நாட்டு அரசாங்கம், மீனவர்கள் விடயத்தைக் கொண்டு அரசியல் பிரசாரம் செய்கிறது. கொழும்போ இலங்கை தமிழர்களையும் இந்திய தமிழர்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது.

இவை தெரிந்தும் கடமைக்கு பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள எமது மனசாட்சி எமக்கு இடமளிக்காது” என்றும் அவர் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்றும் பருத்தித்துறையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது மீன்பிடி வலைகளும் பறித்துச் செல்லப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமை அடிக்கடி இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்திய மீனவர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை யாழ். மீனவர்கள் கடலுக்குச் செல்லாது கறுப்புப் பட்டியணிந்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் யாழ். கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு ஊர்வலமாக யாழ். கச்சேரிக்குச் சென்று அங்கு அரசாங்க அதிபரிடமும் அதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகரிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...