ஐ.ரி.என். முறைகேடு: லலித் வீரதுங்கவிடம் விசாரணை | தினகரன்


ஐ.ரி.என். முறைகேடு: லலித் வீரதுங்கவிடம் விசாரணை

ஜனாதிபதி தேர்தலின்போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்டுவரும் விசாரணைகளின் படி முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவிடமிருந்து வாக்குமூலமொன் றைப் பெறும் நோக்கில் பாரிய ஊழல் மோசடிகள் அரச வளங்கள் முறைகேடாகப் பாவித்தமை தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக் கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலேயே இவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார் என ஆணைக்குழுவின் செயலாளர் லசிந்த.டி.சில்வா தெரிவித்தார்.

முன்னாள் செயலாளர் வீரதுங்கவுக்கு மேலதிகமாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பான பிரசார விளம்பரங்களுக்கான 115 மில்லியன் ரூபாவை அறவிடத் தவறியமை, ஜனாதிபதி வேட்பாளராகியிருந்த மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து 80 மில்லியன் ரூபாவை பிரசார விளம்பரத்துக்காக அறிவிட்டு பிரசாரங்களை முன்னெடுக்காமல் குறித்த பணத்தை மீள அவரிடம் கையளித்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் சரித்த ஹேரத், சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அநுர சிறிவர்த்தன ஆகியோரிட மிருந்தும் மேற்படி ஆணைக்குழு வாக்குமூலங்களைப் பதிவுசெய்துள்ளது.


Add new comment

Or log in with...