ரணில் - மோடி டில்லியில் சந்திப்பு: இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு

நான்கு ஒப்பந்தங்களும் கைச்சாத்து

* ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்வு - ரணில்
* மீனவர் விவகாரம்: இருநாட்டு மீனவர்களும் பேசித்தீர்க்க வேண்டும் - மோடி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் இதுதொடர்பில் ஆராயப்பட்டிருப்பதுடன், நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்றுக் காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்திருந்ததுடன், புதுடில்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

மீனவர் பிரச்சினை, வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பு, கடற்பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இரு நாடுகளுக்குமிடையே நான்கு ஒப்பந் தங்கள் கைச்சாத்தாகின. இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சார்க் வலயத்துக்கான செய்மதி அலைவரிசை தொடர்பாடல் தொடர்பான ஒப்பந்தமும், வவுனியா பெரியாஸ்பத்திரியில் 200 கட்டில்களைக் கொண்ட சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் மற்றும் வைத்திய உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தமும், இலங்கையில் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக

முன்னெடுக்கப்படும் சிறிய அபிவிருத்தித் திட்டங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூகசேவை நிறுவனங்கள் கல்வி மற்றும் தொழில்பயிற்சி நிறுவனங்களுக்காகவும் இந்திய நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தமும், இலங்கையினுள் அவசர அம்புயூலன்ஸ் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற் கான ஒப்பந்தங்களுமே கைச்சாத்திடப் பட்டன.

இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்தியாவின் சார் பாக எஸ்.கிரன்குமார் இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜயசங்கர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவும் கைச்சாத்திட்டனர்.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்வதில் அக்கறை
பிரதமர் ரணில்

ஒன்றிணைந்த இலங்கைக்குள் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக எவ்வாறு அதிகாரங்களைப் பகிரலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்காக இன்னும் பல விடயங்கள் செய்யப்பட வேண்டி இருப்பதாகவும் கூறினார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்றையதினம் புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இருநாட்டு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. இதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக ஊடகவியலாளர் சந்திப் பொன்றை நடத்தியிருந்தனர்.

இதில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது எனது முதலாவது வெளிநாட்டு விஜயமாகும். இது வழமையான எனது நடைமுறை என்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பின்னர் இடம்பெற்ற விஜயமாகும். நாம் பாராளுமன்றத் தேர்தலொன்றுக்கு முகங்கொடுத்திருந்தோம். இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் தனித்துவமானது என்பதுடன், வரலாற்று முக்கியமானது. காரணம், 1956ஆம் ஆண்டின் பின்னர் அதிகாரத்துக்காகப் போட்டியிட்ட இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை அமைத்துள்ளன. இரண்டு வருடங்களுக்கு நாம் ஒன்றிணைந்துள்ளோம். கொள்கைத் திட்டமிடல், ஒருமைப்பாடு மற்றும் சமரசம் என்பவற்றில் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம்.

இதன் ஒரு அங்கமாக பிரதான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் மூன்றாவது கூடுதல் ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அமைந்துள்ளது. பாராளுமன்றத் தில் சகல தரப்பினரதும் பிரதிநிதித்துவ மும் உள்ளது. சகலருக்கும் முக்கியமான பங்களிப்பைச் செலுத்துவதற்கு ஏதுவான இடமாக பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான வரலாற்று நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கும் நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் உறவுகளை மேலும் எவ்வாறு பலப் படுத்துவது என்பது பற்றி இந்தச் சந்திப் பில் நாம் விரிவாக ஆராய்ந்திருந்தோம். இரு நாட்டுக்கும் இடையிலான பலமான உறவுகளைத் தொடர்ந்து முன்னெடுப் பதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்தையும் வெளி யிட்டிருந்தேன். இரு தரப்புக்கும் இடையில் நீண்டநேரம் விரிவான பேச்சுக்கள் இடம்பெற்றன.

ஜெனீவா நிலைமைகள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர், இந்தியப் பிரதமருக்கு விளக்கமளித்திருந் தார். சகல இலங்கையர்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்பதை உறுதிப் படுத்துவது, மனித உரிமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அரசாங் கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். நிச்சயமாக நாம் கடந்தகாலத்தைத் திரும்பிப்பார்க்க வேண்டியிருந்தாலும் சகலரும் ஒன்றிணைந்து நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடிய மர்த்துவதற்கு இந்தியா வழங்கிவரும் முழுமையான ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின் றோம். ஒன்றிணைந்த இலங்கைக்குள் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக எவ்வாறு அதிகாரங்களைப் பகிரலாம். இதற்காக இன்னும் பல விடயங்கள் செய்யப்பட வேண்டி இருக்கிறது.

பாதுகாப்பு விடயம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களை விரிவாக ஆராய்வதற்கு இந்த விஜயம் நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடற்பரப்பில் ஒத்துழைப்பு மற்றும் இருநாட்டு பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டன. இந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவது எமது வெற்றிக்கான வாய்ப்பாக அமையும். இந்துசமுத்திரத் தில் ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால் எமது இரண்டு நாடுகளும் பாதிக்கப் பட்டுவிடும்.

இரு நாட்டுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புப் பற்றியும் சந்திப்பில் கவனம் செலுத்தியிருந்தோம். பொருளாதார விவகாரத்தில் வர்த்தகம் முதலீடு, தொழில்நுட்பம் அபிவிருத்துக்கு இது மிகவும் முக்கியமானது. இந்திய அரசாங்கத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு போன்றவற்றுக்கு எமக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அடுத்த கட்டமாக இரு நாட்டையும் சேர்ந்த தனியார்துறையினர் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றோம். இது தொடர்பாக நாம் நீண்டகாலமாகப் பேசி வருகின்றோம்.

இந்த வருட இறுதியில் குறைந்தது இரு நாடுகளும் கொள்கையளவில் இணக்கப்பாடொன்றுக்கு வரும். அடுத்த வருட நடுப்பகுதியில் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தலாம்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் பொருளாதார ஒத்துழைப்பு என்பது புதியதொரு விடயம் அல்ல. சுமார் 2500 வருடங்களுக்கு மேலாக காணப்படும் ஒரு விடயமாகும். பொருளாதார ஒத்துழைப்பு என்பது இலங்கையின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானது என்பதுடன், ஐந்து வருடங்களுக்குள் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும் திட்டத்தை நாம் வகுத்துள்ளோம்.

அத்துடன் மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம். இரு தரப்பு மீனவர்களையும் உள்ளடக்கியதான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும். குறித்த கால எல்லையொன்றுக்குள் இவ்விடயம் தீர்க்கப்பட்டால் எமது பகுதியைச் சேர்ந்தவர்கள் தமது துறையை விருத்தி செய்ய முடியும்.

அடுத்து சுற்றுலாத்துறை பற்றியும் இதற்கான ஒத்துழைப்புக்கள் பற்றியும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தோம். இது வெறுமனே ஆரம்பம் மட்டும்தான். அடுத்தவருட நடுப்பகுதியில் ஒப்பந்தங்கள் கைச்சாத்தான தும் இரு தரப்பும் இணைந்து செயற்பட முடியும் என்றார்.

மீனவர் விவகாரம்: இருநாட்டு மீனவர்களும் பேசித் தீர்க்க வேண்டும்
பிரதமர் மோடி

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளும் பேச்சுக்களை நடத்தி தீர்வொன்றுக்கு வரவேண்டும் என்ற விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்த பின்னர் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மீனவர் பிரச்சினை என்பது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால் இதனை மனிதநேயத்துடன் பார்க்கவேண்டிய தேவை உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலாவதாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

அதன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வந்துள்ளார். இலங்கை மக்கள் இந்த வருடத்தில் இரண்ட தடவைகள் மாற்றத்துக்காகவும், மறுசீரமைப்புக்காகவும், நல்லிணக்கத் துக்காகவும் வாக்களித்துள்ளனர். இது இலங்கையின் ஜனநாயகம் பலமாக உள்ளது என்ற செய்தியை தெளிவாகச் சொல்லியுள்ளது. இலங்கையின் சகல முயற்சிகளுக்கும் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

இலங்கை அரசியல் தலைமைத்துவம் மற்றும் இலங்கை மக்கள் சகலரினதும் ஒத்துழைப்புடன் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என நம்புவதுடன், தமிழ் மக்கள் உள்ளடங்கலாக சகலரும் சமமான உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழல் ஏற்படும் என நம்புகின்றோம்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடந்த மார்ச் மாதம் முதல் இருதரப்பு உறவுகளில் குறிப்பிடக்கூடியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன், வர்த்தக செயற்பாடுகளை அதிகரித்துக் கொள்வதே இரு நாட்டின் தேவையாகவும் உள்ளது. இந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது தொடர்பில் நாம் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.

இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து என்பவற்றில் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத ஒழிப்புக் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடப்பட்ட தாக அவர் மேலும் தெரிவித்தார்.

நமது விசேட நிருபர் 


Add new comment

Or log in with...