நான்கரை வருடம் வரை அரசை கலைக்க முடியாது

  • நியமனங்கள் வழங்குவதற்கு பொது சபை நியமிக்கப்பட்டு பொருத்தமானோர் நியமிக்கப்படுவர்
 
அமைச்சரவை பதவியேற்பில் ஜனாதிபதி
 
கடந்த எட்டு மாதங்களில் நாட்டின் அரசியலில் புதிய அனுபங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
 
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
 
என்னை பொது வேட்பாளராக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பல கட்சிகளின் உதவியுடன் மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சி செய்த 100 நாட்களைக் கொண்ட தற்காலிக அரசாங்கத்தில், பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கொண்டிருந்தது.
 
எமது 100 நாள் ஆட்சியின் போது, புதிய வரவு – செலவுத்திட்டத்திற்கும் 19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கும் சுதந்திர முன்னணி ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.
 
எமது தற்காலிக ஆட்சியின் போது, தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக நாம் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்திருந்தது.
 
நாம் கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொள்ளும்போது, கடந்த சில தசாப்தங்களாக அமைச்சரவையை உருவாக்கும்போது பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டன.
 
2010 இல், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தும், அமைச்சரவையை உருவாக்குவதில் சிக்கல்கள் காணப்பட்டன.
 
அவ்வாறான அனுபவம் எமக்கு உள்ள நிலையில், பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து அரசாங்கமொன்றை அமைக்கும்போது தோன்றும் சிக்கலின் நிலைமை குறித்து அறிந்திருப்பது அவசியமாகின்றது.
 
அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சு பதவிகளை வழங்கும்போது பல சிக்கல்கள் தோன்றிய போதிலும், அதற்காக ஒத்துழைப்பு வழங்கியமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அமைச்சுப் பதவி கிடைத்தவர்கள், கிடைத்துள்ள அமைச்சு பற்றி எண்ணுகின்றனர். அது கிடைக்காதவர்கள், தமக்கு கிடைக்கவில்லையே என எண்ணுகின்றனர்.
 
(அமைச்சு) கிடைத்தவர்களையும் கிடைக்காதவர்களையும் திருப்திப்படுத்துவதானது கடினமான விடயமாகும்.
 
பாராளுமன்றத்திலுள்ள 225 பேரில், பெரும்பாலானோர் அரசுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
 
அமைச்சு பதவிகளின் மூலம் மட்டுமல்லாது, மாவட்ட அபிவிருத்தி தலைவர்கள் பதவி, செயற்குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் பல நிறுவனங்கள் என்பவற்றுக்கு வழங்கும் பரவலாக்கப்பட்ட நிதியினை பகிர்ந்தளிக்கும் போது, அனைவருக்கும் சமமாக கிடைக்கும் வகையில் அந்நடவடிக்கையை மேற்கொள்வேன்.
 
அரசியல்வாதிகள், இரகசியமாகவேனும் தவறு செய்யக் கூடாது. இரகசியமாக (தவறு) செய்தாலும் அது வெளிப்படையாக மக்கள் மத்தியில் சென்றடையும். இரகசியமாகவோ, வெளிப்படையாகவோ செய்தாலும், அது தவறு என மக்கள் அறிவார்கள்.
 
ஊழல் மோசடிகளை களைவதற்கு மக்கள் விரும்புகின்றனர்.
 
பிரதமரும் நானும், பொது சபை ஒன்றை அமைத்து, அரச நிறுவனங்களில் ஆட்களை இணைக்கும்போது, பொருத்தமானோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
நிறுவனங்களில் நியமனங்கள் வழங்கப்படும்போது, சபை ஒன்று உருவாக்கப்படும். ஆயினும் அமைச்சர்கள் அதில் கோரிக்கை விடுக்கலாம். அதில் மிகவும் பொருத்தமானவர் நியமிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
நான்கரை வருடங்களுக்குள் அரசாங்கத்தை கலைக்க முடியாது. இந்த பாராளுமன்ற அங்கத்தவர்களே பாராளுமன்றத்தில் இருப்பார்கள்.
 
இரண்டு வருடங்கள் கழிந்த பின்னர், மீதமுள்ள காலத்தில் என்ன செய்ய என்பதை தீர்மானிக்கலாம்.
 

Add new comment

Or log in with...