கோத்தாவுக்கு எதிரான தடை நீக்கம் | தினகரன்

கோத்தாவுக்கு எதிரான தடை நீக்கம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தற்காலிக தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
 
கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் குறித்த வழக்கு விசாரணை காலி நீதிமன்றத்தால் கடந்த மார்ச் மாதம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த தற்காலிக தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.
 
கடந்த ஜனவரி 18 இல் காலி துறைமுகத்தில் பொலிஸாரால் 20 கன்டைனர்களில் சுமார் 3,000 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தது. துறைமுகத்தில் குறித்த ஆயுதங்களைக்கொண்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தனியார் கம்பனியான அவன்ற் கிராட் இனால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த தடையுத்தரவு கோத்தாபய ராஜபக்‌ஷவுடன் முன்னாள் கடற்படை தளபதியும் அவன்ற் கிராட் நிறுவன ஆலோசகருமான சதிலக திஸாநாயக்க மற்றும் அந்நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவருக்கும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இன்று (27) காலி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் பிரதிவாதிகளால் இத்தடையுத்தரவை நீக்குமாறு கோரியதற்கமையவே நீதிமன்றம் இவ்வுத்தரவை நீக்கியுள்ளது.
 
குறித்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற வகையில் இரகசியப் பொலிஸாரால் இவர்களுக்கு எதிராக வெளிநாடு செல்வதற்கான தடையுத்தரவு கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு அமையவே நீதிமன்றால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  

Add new comment

Or log in with...