பயங்கரவாத தடைச்சட்டம் தனிமனித சுதந்திரத்திற்குத் தடை | தினகரன்

பயங்கரவாத தடைச்சட்டம் தனிமனித சுதந்திரத்திற்குத் தடை

உடன் ஒழிக்குமாறு கபே வேண்டுகோள்

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ளபோதும் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் இன்னமும் நீக்கப்படாமல் இருப்பது கவலையளிப்பதாக கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது தனிநபர் சுதந்திரத்தில் பாதிப்புச் செலுத் துவதால் அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் சுயாதீனமான செயற்பாடு, சிவில் சமூகத்தின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்பதால் இது தனிநபர் சுதந்திரத்தில் பாரதூரமான பாதிப்பைச் செலுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது மாத்திர மன்றி எதுவித கால எல்லையுமின்றி ஒருநபரை சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைப்பதற்கு இச்சட்டம் வழியேற்படுத்து வதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும்மோசமானதொரு சட்டமாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் காணப் படுகிறது. இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டி யுள்ளது. ஏனெனில் இலங்கை தற்பொழுது சிவில் நிர்வாகத்தால் ஆட்சிசெய்யப்படும் நாடாக மாறியிருப்பதால் இச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் தரப்பினர் இவ்வாறான கடுமையான சட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றனர். இவ்வாறான நிலையில் இவ்வாறான சட்டத்தை நீக்குவதற்கு அல்லது வேறு சட்டங்கள் மூலம் இதனை தற்காலிகமாக நிறுத்திவைத்து நாட்டில் முழுமையான சிவில் நிர்வாகம் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை காண்பிக்கும் பொறுப்பு பாராளுமன்றத்துக்கு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(மகேஸ்வரன் பிரசாத்)


Add new comment

Or log in with...