எதிரியை வேவு பார்க்கவும் ஒற்றுக் கேட்கவும் பல்லியைக் கூட பயன்படுத்தும் தொழில்நுட்ப | தினகரன்

எதிரியை வேவு பார்க்கவும் ஒற்றுக் கேட்கவும் பல்லியைக் கூட பயன்படுத்தும் தொழில்நுட்ப

சமீபத்தில் ஒரு பிரபல நாடக ஆசிரிய நண்பர் வீட்டுக்குப் போனபோது அடுத்து அரங்கேறப் போகும் தன் நாடகத்தின் கதையை சொல்லத் தொடங்கினார்.

“கல்யாண சமையல் சாதம்னு பாடிக்கிட்டு ஒரு மகாபாரதக் கேரக்டர் கம்ப்யூட்டருக்குள்ளே இருந்து வர்றான்”

“சார் முதல்ல உங்க கம்ப்யூட்டரை அணைத்து வையுங்கள். அது கதையை ஒற்றுக் கேட்டுவிடும்” என்று நான் சொல்ல சிரிப்பரசரான அவர் “ஜோக்கடிக்காதீங்க என்று என்னைக் கண்டித்தார்.

செய்தி உண்மைதான். நாம் எல்லோரும் இணையம் என்ற வைக்கோல் போரில் நமக்கு வேண்டிய தகவல் ஊசியைத் தேடப் பயன்படுத்துகிறோமே கூகுள் உலவி அது நாம் பேசுவதை ஒற்றுக் கேட்கிறதாம். ஆமாம் கேட்குது என்று ஏகப்பட்ட பேர் சத்தியப் பிரமாணம் செய்யத் தயாராக இருக்க கூகுள் விளக்கம் சொன்னது.

தேட வேண்டிய விபரத்தை கம்ப்யூட்டரில் பதிந்து, கூகுள் கொண்டு தகவல் தேடுவது வழக்கமான முறை. ஒபாமா பற்றிய தகவல் வேண்டும் என்றால் உலவியின் நீள் சதுரப் பட்டையில் ஒபாமா என்று விசைப்பலகையில் தட்டிப் பதிவோம். உடனே கூகுள் இணையத்தில் தேடி. ஒபாமா பற்றி எங்கே என்ன தகவல் உண்டு என்று பட்டியல் தரும்.

பதிந்து தேடும் இந்த முறை வசதியானதுதான். மேலும் இதைவிட வசதியான முறையும் உண்டு. கணினி முன் அமர்ந்து ஒபாமா என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னால் போதும். ஒலிவாங்கியில் அந்தச் சொல்லை உள்வாங்கி அலசி ஒபாமா பற்றிய தகவல்களைக் கணினித் திரையில் தரும் ஒரு செயலி அறுமுகமாகி உள்ளது.

கூகுள் இன்னொரு மென்பொருள் நிறுவனத்திடம் வாங்கி இணைத்துள்ள இந்தச் செயலி, சில கம்ப்யூட்டர்களில் அனுமதி இல்லாமலேயே ஒலிவாங்கியை ஒன் செய்துவிடுகிறது. அப்போது கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து பேசும் எதுவும் செயலி மூலம் அலசப்பட்டு கூகுள் நிறுவனத்துக்குக் கிடைக்கலாம். இது தற்செயலானது.

உங்கள் கணனியில் அந்தச் செயலி இருந்தால், ஒலிவாங்கியின் இருப்பைச் சரி பாருங்கள். ஒன் ஆகியிருந்தால் மைக்கை ஓஃப் செய்யுங்கள் போதும். மற்றபடி நீங்கள் பேசுவதை ஒற்றுக் கேட்பதில் கூகுளுக்கு எந்த ஆர்வமும் இல்லை.”

சூழ்நிலையின் பரபரப்பு தணிய கூகுளின் தன்னிலை விளக்கம் உதவி செய்தாலும் இப்படி நம் வீட்டுக் கம்ப்யூட்டரை வைத்து நம்மையே உளவு பார்க்க இயலும் என்ற உண்மை சுடுமோ என்னமோ, அதிர்ச்சி தரத் தவறுவதில்லை.

கூகுள் செய்யவில்லை என்றாலும் உலகம் முழுக்கப் பரவி வரும் வியாதி ‘ஒற்றுக் கேட்பது’. எதிர்க் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களை அரசாங்கம் ஒற்றுக் கேட்கிறது என்ற குற்றச்சாட்டு எழாத ஜனநாயக நாடுகள் குறைவு. நாடுகள் ஒன்றை ஒன்று உளவு பார்க்க ஒற்றுக் கேட்கின்றன என்ற புகார்களும் பரவலானவை.

அமெரிக்கா உளவு பார்த கதை இதுதான்.

சீன அரசு முன்னர் அமெரிக்கத் தயாரிப்பாக ஒரு விமானம் வாங்கியது. சீனத் தலைவர்கள் பயணம் செய்வதற்கான சிறப்பு வாகனம் அது. பீஜிங்கில் புது விமானம் வந்து சேர்ந்தபோது சீனர்கள் விமானத்தைப் பரிசோதிக்கத் தொடங்கினர். தரை, கூரை, ஜன்னல், கதவு என்று ஒரு இடுக்கு விடாமல் பரிசோதித்தனர். உள்ளே மறைத்து வைத்த ஒற்றுக் கேட்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்கா சீனாவை ஒற்றுக் கேட்டு உளவு பார்த்தது இப்படி.

சோவியத் உளவு பார்த்த கதை இவ்வாறானது.

பழைய சோவியத் யூனியனின் தலை¨ மப் பீடமான மொஸ்கோவில் அமெரிக்கத் தூதரகம் தொடங்க முற்பட்டபோது சோவித் நாடு புதுக் கட்டடமே கட்டி அமெரிக்காவை வரவேற்றது. கட்டடம் முழுக்க ஒற்றுக் கேட்கும் கருவிகள் இருந்ததால், அமெரிக்கத் தூதரகம் அங்கே படியேற வில்லை.

நிலம் வாங்கி, அமெரிக் காவில் இருந்து சீமெந்து, செங்கல், கட்டடத் தொழிலா ளர்கள் என்று கொண்டு வந்து மொஸ்கோவில் கட்டி முடித்துக் குடியேறினார்கள். சோவியத் நாடு அமெரிக்காவை ஒற்றுக் கேட்டு உளவு பார்த்த கதை இது.

சங்கிலித் தொடர் போலப் போகும் இந்த ஒற்றுக் கேட்கும் தேசங்கள் பற்றிய வதந்தி சங்கிலித் தொடரில் பாகிஸ்தானும் இந்தியாவும் கூடக் கண்ணிகளாக இருக்கலாம். ஒற்றுக் கேட்பதை அநேக நாடுகள் சட்ட விரோதமாக்கினாலும் அப்படிச் செய்வதை நிறுத்தவில்லை.

ஒற்றுக் கேட்கும் “பூச்சிகள்” கூட உருவாக்கப்பட்டுள்ளன.

பேசுவதைக் கேட்க ஒரு சின்னஞ்சிறு மைக், கேட்டதைக் கண்டம், கடல் கடந்து அனுப்ப அதே போல் சிறிய டிரான்ஸ்மிட்டர் மறு முனையில் ஒலிபெருக்கி. இப்படி எளிமையாக ஒற்றுக் கேட்கும் சாதனத்தை அமைத்துவிட முடியும்.

தொழில்நுட்பம் வளர, நடைமுறையில் இருந்த இந்த ஒற்றுக் கேட்கும் ‘பூச்சிகள்’ (bugs) ஓய்வு பெற்று லேசர் ஒற்றுக் கேட்பான் வந்தது. கேட்க வேண்டிய அறையில் அழகான புகைப்படமோ ஓவியமோ வைக்க வேண்டியது. அந்தப் படத்தின் மேல் தொலைவில் இருந்து லேசர் ஒளிக் கற்றையைச் செலுத்த வேண்டியது. அறையில் ஏதாவது பேச்சுச் சத்தம் எழுந்தால், ஒளிக்கற்றை அதிர்ந்து படத்திலிருந்து திரும்பும். அதிர்வைப் பதிவுசெய்து அதிலிருந்து அறையில் எழுந்த பேச்சுச் சத்தத்தை அப்படியே உருவாக்கலாம். இது நடைமுறைப்படுத்தக்கூடியது என்றாலும் எந்த நாட்டில், யாரை இப்படி வேவு பார்க்கிறார்கள் என்று தெரியாது.

செயற்கைக் கோள் மூலம் விவரம் பெற்று, காரில் செல்லும் போது வழிகாட்ட காரில் பொருத்தப்பட்ட கருவி உண்டு. இதைப் பயன்படுத்திக் காருக்குள் நடக்கும் உரையாடலைத் தொலைவில் இருந்து ஒற்றுக் கேட்பது இன்னொரு நடைமுறைசெல்பேசி உலகம் முழுவதும் பெருகியதும் ஒற்றுக் கேட்க அதுவும் உறுதுணையானது.

எங்கேயோ இருக்கும் ஒருவரின் செல்ஃபோனைத் தொலைவில் இருந்து இயக்கி, அதன் ஒலிவாங்கியைச் செயல்படுத்தி செல்பேசி அருகில் கேட்கும் பேச்சைத் தூரம் கடந்து ஒற்றுக் கேட்கலாம். அமெரிக்க அரசாங்கப் புலனாய்வு நிறுவனமான எஃப். பி. ஐ. வெற்றிகரமாக இப்படிச் செய்வதாகத் தகவல்.

தொலைபேசித் தொடர்புக்கான 4-ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பரவலாகும்போது, வீட்டல் இருக்கும் குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், மின்சார அடுப்பு, மின்விளக்கு போன்ற சாதனங்களையும் இணையம் மூலம் இணைத்துத் தொலைவில் இருந்து இயக்க முடியும். இவற்றை உபயோகித்து வேவு பார்ப்பதும் எளிதாகி விடலாம்.

இதையெல்லாம் ஒன்றுமே இல்லாமல் செய்துவிடும் புதுத் தொழில்நுட்பம், உயிருள்ள கரப்பான் போன்ற பூச்சிகளின் தலைக்குள் நுண்ணிய கருவியைப் பதித்து ஒற்றுக் கேட்பது ஆக, கூரையில் உட்கார்ந்து சத்தமிடும் பல்லிகூட வேறு யாருக்காவது வீட்டு விவகாரத்தை ஒலிபரப்பக்கூடும்.

அறிவியல் புனைகதையைவிட நடைமுறை அறிவியல் சுவாரசியமானதாகப் போய்க்கொண்டு இருக்கிறது.


Add new comment

Or log in with...