நேவி சம்பத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு

நேவி சம்பத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு-Navy Sampath Chandana Prasath Remanded Sep 26

 

பாதுகாப்பு படை பிரதானி நாட்டில் இல்லை

கடந்த 2008 - 2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை, ரவிராஜ் எம்.பி. கொலை வழக்கின் சந்தேகநபரான, 'நேவி சம்பத்' என அழைக்கப்படும் கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு எதிர்வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் (13) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (12) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன் முன்னிலையில், முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் செப்பெடம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் மறைந்திருக்க உதவியதாக, முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணரத்னவிடம் கடந்த திங்கட்கிழமை (10) வாக்குமூலம் பெறுவதற்காக, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் அவர் சமூகமளிக்கவில்லை என, CID யினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அவர், மெக்சிகோவில் இடம்பெறும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்கொள்ளும் பொருட்டு, அன்றையதினம் (10) அதிகாலை நாட்டிலிருந்து சென்றுள்ளதாகவும் CID யினர் நீதிமன்றிற்கு அறிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவி, ஒத்தாசை புரிந்தமைக்கான உறுதியான ஆதாரங்கள் இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆயினும் ரவீந்திர விஜேகுணரத்ன, தான் வெளிநாட்டுக்கு செல்வதாக கடந்த திங்கட்கிழமை (10) பிற்பகல் 2.00 மணிக்கே தமக்கு அறிவித்ததாகவும், எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் அதன் பின்னர் தனது வாக்குமூலத்தை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக CID யினர் நீதிமன்றிற்கு அறிவித்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, வழக்கின் பிரதான சந்தேகநபரான சந்தன பிரசாத், பயன்படுத்திய கடவுச்சீட்டு மற்றும் ஆள்அடையாள அட்டை ஆகிய போலி ஆவணங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக CID யினர் நீதிமன்றிற்கு அறிவித்தனர்.

குறித்த சந்தேகநபர், வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, கைதாகும்போது அவரிடம், பொல்வத்த கால்லகே அசோக எனும் பெயருடனான போலியாக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையொன்று மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.
 


Add new comment

Or log in with...