ஐ.நா சபையில் ஜனாதிபதி உரை; இலங்கைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | தினகரன்


ஐ.நா சபையில் ஜனாதிபதி உரை; இலங்கைக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது அரச தலைவர்களுக்கான உயர் மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையை இலங்கைக்கு சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள மிகச் சிறந்த அங்கீகாரமாக நாம் காண்கின்றோமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.

அரச தலைவர்களுக்கான முதல் நாள் கூட்டத்தில் ஜனாதிபதி சிங்களத்தில் உரையாற்றுவாரென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜெனீவா விஜயத்தின்போது பல நாட்டின் அரச தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியிருப்பதுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தலைமையில்

ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போதைவஸ்து தொடர்பான சவாலை சர்வதேச மட்டத்தில் முறியடிப்பது தொடர்பிலான பயிற்சிபட்டறையிலும் கலந்துகொள்வார்.

அத்துடன் 24 ஆம் திகதி நெல்சன் மண்டேலாவின் நினைவு தினத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்புரையாற்றவுள்ளார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

"ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் அரச தலைவர்களுக்கான உயர் மட்ட மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. இதில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடிய மிக விசேடமான முதல் நாளன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இது இலங்கைக்கு மிகவும் சாதகமானதொரு விடயம் என்பதுடன் இது இலங்கைக்கு சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள சிறந்த பிரதிபலிப்பாகவே நாம் கருதுகின்றோம்," என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.

ஜெனிவாவில் ஜனாதிபதி இலங்கையில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விளக்கமளிப்பாரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் செயலாளர் நாயகம் ஹூசைன் ஏற்கனவே இலங்கைக்கு நேரில் வந்து ஜனாதிபதியை சந்தித்திருப்பதனால், ஜெனீவாவில் அவருடன் நல்லெண்ணப் பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.

இலங்கை போதைப் பொருள் விவகாரத்தில் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுதொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளுடனான தொடர்பு எமக்கு பெரும் சக்தியாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர், "ஜனாதிபதி எச்சந்தர்ப்பத்திலும் இராணுவ வீரர்களை பாதுகாப்பேன் என உறுதியளித்துள்ளார். அதனடிப்படையிலேயே 25 ஆம் திகதி அவர் சர்வதேசம் முன்னிலையில் உரையாற்றுவாரென நம்புகின்றோம்.பொறுத்திருந்து பார்ப்போம்," என்றும் பதிலளித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்

 


Add new comment

Or log in with...