இந்தியாவை வடகொரியாவாக்கும் உங்களுடைய கனவு பலிக்காது | தினகரன்

இந்தியாவை வடகொரியாவாக்கும் உங்களுடைய கனவு பலிக்காது

பா. ஜனதாவிற்கு காங்கிரஸ் பதில்

50 ஆண்டுகள் ஆட்சிசெய்வோம் என பா. ஜனதா கூறியதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், இந்தியாவை வடகொரியாவாக்கும் உங்களுடைய கனவு பலிக்காது என கூறியுள்ளது.

பா.ஜனதா தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பேசுகையில், “2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை வெற்றியை பெறும். அதன்பின்னர் பா.ஜனதாதான் இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்யும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், “ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள், அரசியலமைப்பின் மாண்பை நசுக்க விரும்புபவர்களால் மட்டுமே இப்படி பேசமுடியும். மக்களாட்சியை மதிக்காத ஆணவம். எதேச்சதிகார ஆட்சியாளர்கள் மட்டும்தான் இப்படி பேசுவார்கள்” என்று கூறியுள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயகமற்ற முறையில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்ய நினைக்கிறார்கள். ஆனால் இந்தியா ஒன்றும் வடகொரியா கிடையாது. வடகொரியாவில்தான் பல ஆண்டுகளாக ஒருகட்சி மட்டும் அதிகமான உரிமைகளை கொண்டு ஆட்சிசெய்கிறது. இந்தியாவை வடகொரியா போல சர்வாதிகார ஆட்சிக்குள் கொண்டுவர நினைக்கும் பா.ஜனதாவின் கனவு பலிக்காது. இந்தியா விழிப்புணர்வு கொண்ட மக்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சிகளை கொண்டது.

இவர்கள் உங்களைப் பதவியிலிருந்து தூக்கியெறிவதற்கு நீண்ட காலம் பிடிக்காது. ஜனநாயகம் மீது நம்பிக்கையற்றவர்களுக்கு தேர்தலில் மக்கள் வாக்கு அளிப்பார்கள் என்பது நிச்சயம் கிடையாது. 2019 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சிமைக்கும் என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்'” என கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...