இந்து, பௌத்த மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் | தினகரன்


இந்து, பௌத்த மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்பாறை மாணிக்கப் பிள்ளையார்

தீர்த்தோற்சவம் நாளை

கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் கிழக்கில் ‘பட்டிப்பளை’ என்ற கல்லோயா பிரதேசம் தமிழ் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அக்காலத்தில் குறிப்பாகத் தென்னிந்தியாவையொத்த அரசு முறையே இங்கும் நிலைபெற்றிருந்தது. இந்து மதமும் பௌத்த மதமும் ஒருங்கே மக்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன.

இப்பகுதியை ஆட்சி புரிந்தவர்கள் பாண்டிய குலத்து தமிழ் சிற்றரசர்களாவர். இவர்களது ஆட்சி தீகவாப்பியை உள்ளடக்கிய கல்லோயா பிரதேசத்தில் உன்னத நிலையில் இருந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமிய கல்வெட்டுச் சாசனங்கள் இதனை உறுதி செய்கின்றன.

இந்த கல்வெட்டுச் சாசனப்படி கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் உரோகண மண்டலம் முழுவதையும் (அம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள்)

பாண்டிய குலத்து தமிழ் அரசர்களே ஆட்சி புரிந்து வந்துள்ளனர். இக்காலத்தில் அம்பாறை, தீகவாபி ஆகிய பிரதேசங்களில் பெருமளவிலான தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இன்று அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் ‘அம்பாறைவில்’ என்ற பெயருடன் விளங்கியுள்ளது.

கண்டி மன்னன் காலத்தில் பல வன்னிமைகளின் நிருவாகத்தில் கிழக்கு மாகாணம் பரிபாலிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தின் உகனை பகுதியில் சிந்தாத்துரை வன்னிமை இப்பகுதியை பரிபாலித்துள்ளதாகவும், இன்னும் இவரது சந்ததியினர் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இவர்கள் பௌத்த சமயத்தை பின்பற்றி பௌத்தர்களாக வாழ்ந்தாலும் அம்பாறை மாணிக்கப்பிள்ளையாரையே குலதெய்வமாக வணங்கி வருவதையும் காணமுடியும்.

பட்டிப்பளை ஆற்றை மையப்படுத்தி உகனை மல்லிகைத்தீவு வளத்தாப்பிட்டி, மாணிக்கமடு, சம்மாந்துறை, அட்டப்பள்ளம், காரைதீவு, கருங்கொடித்தீவு, கரவாகுப்பற்று, திருக்கோவில். தம்பிலுவில், பாண்டிருப்பு, திருப்பழுகாமம் போன்ற பல கிராம மக்கள் வில்லுக்குளத்தை மையப்படுத்தி காடுவெட்டி குடியேறியதுடன் குளக்கரையிலுள்ள மலைக்குன்றில் கற்பிள்ளையார் வைத்து வணங்கி வந்துள்ளனர். இதன் பின்னர் இங்கினியாகல குளம் அகழும் போது கண்டெடுத்த பிள்ளையார் சிலை ஒன்றை துரைசாமி என்பவர் இம்மலையில் வைத்து சிறுகோயில் அமைத்து பூஜித்த பாரம்பரிய கதைகள் இங்கு உள்ளன. (தற்போது மூலவர் அமர்துள்ள மலை)

இதேபோல் ஆனைக்குட்டி சுவாமிகளும் இப்பிள்ளையாரை வழிபட்டுள்ளார். கல்லோயாத் திட்டம் பணிக்கு வந்த தமிழ் அதிகாரிகளிடம் இப்பிள்ளையாரின் சிறப்பைக் கூறி இவரின் அருளினால் எல்லாம் இனிதே நடந்தேறும் இவருக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கேட்டுள்ளார். அக்காலத்தில் உடையாராகவிருந்த நாதபிள்ளை என்பவர் தமிழ் அதிகாரி முதல் ஊழியர்கள் வரை ஒன்று திரட்டி கல்லோயா இந்து பரிபாலன சபை என்னும் சபையை அமைத்து 1954.05.03 ஆம் திகதி ஆகம முறையிலமைந்த கற்கோயிலை நிர்மாணித்துள்ளார்.தமிழ் பாரம்பரிய முறைப்படி ஆலயப் பூஜைகள் திருவிழாக்கள் இடம்பெற்றாலும் ஆதிநாளில் வாழ்ந்த பௌத்த மத தமிழர்களின் (மொழி சிங்களம்) வழித்தோன்றல்களும் இப்பிரதேச இந்துக்களும் அதனோடு கல்லோயா திட்டத்தின் மூலம் குடியமர்த்தப்பட்ட பௌத்த சிங்களவர்களும் இப்பிள்ளையாரையே தமது குலதெய்வமாக போற்றி வணங்கி வருகின்றார்கள்.

இவ்வாலயம் பல வன்முறை கலவரங்களுக்கு உட்பட்டு பல சிதைவுகளை கண்டுள்ளது. குறிப்பாக 1990 இன மோதல்களின் போது (உள்நாட்டு யுத்தம்) ஆலயம் முற்று முழுவதுமாக அழிக்கப்பட்டு மூலவர் சிலை பெயர்த்தெடுக்கப்பட்டு ஆலயம் முன்னால் உள்ள தீர்த்தக் குளத்தில் வீசி எறியப்பட்டது. இந்த மூலவிக்கிரகத்தை பெயர்த்தெடுத்த பெரும்பான்மை இன ஆண் ஒருவர் வீசி எறிந்த அன்றே பித்துப் பிடித்து அலைந்து திரிந்ததுடன்,அவர் எந்த நேரமும் ஒரு கல்லை தூக்கிக் கொண்டே செல்வார். உணவு உண்ணும் போது மட்டும் பாரத்தை இறக்கி வைப்பார். இதனை சிங்கள மக்கள் நேரில் கண்டனர்.

ஆலயம் சேதமாக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் அரச படைத் தரப்பு அக்கரைப்பற்று விபுலானந்த மாணவர் இல்லத்தில் மக்களை சந்தித்து ஆலயத்தை படைத்தரப்பு உடனடியாக புனரமைத்தது வரலாற்று உண்மையாகும்.

இதனைத் தொடர்ந்து 2002 இல் சகல மக்களின் பேராதரவுடன் ஆலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

நாட்டில் ஏற்பட்ட இன நல்லுறவின் வெளிப்பாடாக அம்பாறை நகரின் மத்தியில் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றதுடன் அழகிய கோபுரத்துடன் ஆலயம் இன்று காட்சி தருகின்றது.

மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற இப்பிள்ளையார் ஆலயம் தமிழர்களின் இருப்பை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. சிங்கள மக்களின் பேராதரவும், பொருளாதார உதவிகளும் கிடைத்து வருகின்றன.

இன்று புதன்கிழமை இடம்பெறும் 10 ஆம் திருவிழாவினை (12.09.2018) தொடர்ந்து சுவாமி அம்பாறை நகர் வீதி வழியாகப் புறப்பட்டு பௌத்த ஆலயம் சென்று மீண்டும் ஆலயம் சென்றடையும் பாரம்பரிய நிகழ்வு இடம்பெறுவது ஒரு சிறப்பம்சம் எனலாம்.நாளை தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.

(ஆர். நடராஜன் - பனங்காடு தினகரன் நிருபர்)

 


Add new comment

Or log in with...