ஆசிய கிண்ணமும் இலங்கை அணியும் | தினகரன்


ஆசிய கிண்ணமும் இலங்கை அணியும்

ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இடையில் நல்லுறவை விருத்தி செய்யும் நோக்கோடு, ஆசிய கிரிக்கெட் சபை 1983 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஆசியக் கிரிக்கெட் சபையின் உருவாக்கத்தின் பின்னர் 1984 ஆம் ஆண்டு முதல் தடவையாக நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு அதன் 14 ஆவது அத்தியாயத்தை அடைந்திருக்கின்றது.

இந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் விழாக்கோலம் காணவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டிகள் சனிக்கிழமை (15) ஆரம்பமாகவுள்ளதுடன் இம்முறைக்கான தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் என ஆசியாவின் திறமை மிக்க கிரிக்கெட் அணிகள் தமக்கிடையே பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

2016 ஆம் ஆண்டு கடைசியாக ரி 20 போட்டிகளாக நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், இம்முறை ஒரு நாள் போட்டிகளாக இடம்பெறுகின்றது. 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒரு நாள் போட்டிகளாகவே இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் கடந்த காலத்தினை எடுத்துப் பார்க்கும் போது ஐந்து தடவைகள் இலங்கை அணியும், இந்திய அணியும் சம்பியன் பட்டத்தை வென்று தொடரில் வெற்றிகரமான அணிகளாக மாறியிருந்தன.

கடந்த கால ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி சம்பியன் பட்டம் வென்ற நினைவுகளை ஒரு தடவை மீட்டுவோம்.

1986 – இலங்கை பங்குபற்றிய அணிகள் – 3

1986 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தின் இரண்டாவது அத்தியாயப் போட்டிகளே, இலங்கையின் கன்னி ஆசியக் கிண்ண வெற்றித் தொடராக அமைந்திருந்தது.

இந்த ஆசியக் கிண்ண தொடரை இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக இந்தியா புறக்கணித்ததுடன், இந்தியாவிற்கு பதிலாக 1984 ஆம் ஆண்டு தென்கிழக்காசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் அணி தொடருக்குள் முதல் தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தது.

இந்த ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவிய போதிலும் தமது அடுத்த போட்டியில் பங்களாதேஷினை தோற்கடித்து, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் ஆடும் தகுதியைப் பெற்றது.

தொடர்ந்து கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியினால், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 192 ஓட்டங்களை 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்த இலங்கை அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரின் கன்னி சம்பியன்களாக நாமம் சூடினர்.

இலங்கை அணியின் கன்னி ஆசியக் கிண்ண வெற்றிக்கு அர்ஜூன ரணதுங்க அரைச்சதம் ஒன்றினை விளாசி உதவியிருந்ததுடன், வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கெளசிக் அமலன் 4 விக்கெட்டுக்களை சாய்த்து தனது பங்களிப்பினை வழங்கி இருந்தார்.

1997 – இலங்கை பங்குபற்றிய அணிகள் – 4

தமது கன்னி ஆசியக் கிண்ணத் தொடர் வெற்றியை அடுத்து, இலங்கை அணி அடுத்ததாக இடம்பெற்ற மூன்று ஆசியக் கிண்ணத் தொடர்களின் (1988,1990/91,1995) இறுதிப் போட்டிகளுக்கும் தகுதி பெற்ற போதிலும், மூன்று தொடர்களின் இறுதிப் போட்டிகளிலும் இந்தியாவுடன் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியிருந்தனர்.

இப்படியான ஒரு நிலையில் 1986 ஆம் ஆண்டிற்கு பிறகு 1997 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண தொடரின் ஆறாவது அத்தியாயப் போட்டிகள் இலங்கையில் மீண்டும் நடைபெற்றன. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்குபற்றிய இந்த தொடரில் புதிய கிரிக்கெட் உலகக் கிண்ண சம்பியன்களாக இலங்கை களம் கண்டிருந்தது.

இலங்கை அணி தொடரின் முதல் கட்ட போட்டிகள் எதிலும் தோல்வியுறாமல் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. மறுமுனையில் இந்திய அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரில், தொடர்ச்சியாக நான்காவது தடவை இலங்கையை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள தயராகினர்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை குவித்தது.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 240 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை அணிக்கு மாவன் அத்தபத்து (84) துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.

இதனால், இந்தியாவின் வெற்றி இலக்கை இலங்கை 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்ததுடன், ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிகளில் இந்தியாவுடனான தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆசியக் கிண்ணத்தில் இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டம் வென்றது.

 

 


Add new comment

Or log in with...