முன்னாள் கடற்படை தளபதி நாட்டை விட்டு சென்றுள்ளதாக சி.ஐ.டி. தெரிவிப்பு

பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கையொன்றை வழங்குவதற்காக முன்னாள் கடற்படை தளபதியும் பாதுகாப்பு ஆளணி, பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனாலும் அவர் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டை விட்டு சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அட்மிரல் ரவீந்திர விஜே குணரட்ன அவரது உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பாக நேற்று காலையே குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார்.

எனினும் அவ்வேளை, அவர் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார் என்று அந்த அதிகாரி கூறினார். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலத்தில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கையொன்றை வழங்கவே அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அழைக்கப்பட்டிருந்தார்.

காணாமற்போன 11 இளைஞர்கள் தொடர்பான மாஜிஸ்திரேட் விசாரணையை புறக்கணிக்குமாறு கடற்படை அதிகாரியான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்ற நேவி சம்பத்துக்கு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன உதவியும் ஒத்தாசையும் வழங்கியிருந்தார் என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் இருப்பின் அவரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் லங்கா ஜயரட்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கடந்த மாதம் (ஆகஸ்ட்) 29ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நேவி சம்பத் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 13 ஆம் திகதி லோட்டர்ஸ் வீதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார். போலி அடையாள அட்டையுடன் அவர் தென்னந்தோட்டமொன்றில் காவலாளியாக வேலைசெய்து வந்ததாக தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு ஆளணி பிரதானியை கைது செய்ய போதிய சான்றுகள் இருப்பதாக கூறியுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம் முதலில் அவரிடம் இருந்து அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளவே குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு அழைத்திருந்தது.

அதேநேரம் அட்மிரல் விஜேகுணரட்ன மீண்டும் இலங்கைக்கு திரும்புவாரா என்பதில் சந்தேகம் நிலவுவதாகவும் அவ்வாறு அவர் நாட்டுக்கு திரும்பாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.

தற்போதைய நிலை தொடர்பாக நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது. செப்டம்பர் 19 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு திகதியை தருமாறும், அந்த தினத்தில் தான் தனது அறிக்கையை வழங்குவதாகவும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கேட்டிருப்பதாகவும் அவர் உத்தியோகபூர்வ ரீதியிலேயே நாட்டை விட்டுச் சென்றுள்ளதால் அவரது அறிக்கையை வழங்க அவருக்கு புதிய திகதியொன்று கொடுக்கப்படும் என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் கூறியுள்ளது.


Add new comment

Or log in with...