சுகாதார சேவையில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விசாரணை | தினகரன்

சுகாதார சேவையில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் விசாரணை

அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்பு

சுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் பொறுப்புக்களை மீறும் செயற்பாடுகள் தொடர்பில் தராதரம் பாராது முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதற்கென புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்குமாறும் அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படுமென்றும் அமைச்சர் விசாரணைப் பிரிவுக்கு உபதேசம் வழங்கினார்.

சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே அமைச்சர் இந்தப் பணிப்புரையை வழங்கினார்.

பொறுப்புக்களை மீறிச் செயற்படும் வைத்தியர்கள், கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் வேலை செய்வோர் ஆகியோர் தொடர்பில் நாடு முழுவதுமுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் தேடுதல் நடத்துமாறும் அமைச்சர் விசாரணை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இதற்கமைய நாடு முழுவதும் மத்திய மற்றும் மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளை மிகவும் உண்ணிப்பாக ஆராய்ந்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் நோயாளிகளுக்கென அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் கண் வில்லைகள் மற்றும் ஸ்டென்டுகள் முறைப்படி விநியோகிக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராயுமாறும் அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். வைத்தியர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வரும் குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்தும்போது மருத்துவர் சங்கத்தினர் அதற்கு விளைவிக்கும் இடையூறு தொடர்பில் விசாரணைப்பிரிவின் அதிகாரிகள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக அண்மைக்காலமாக அநுராதபுரம் தேசிய வைத்தியசாலை மற்றும் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற இவ்வாறான குளறுபடிகள் தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர். அத்துடன் வைத்தியர்கள் மட்டுமன்றி சுகாதார சேவையுடன் தொடர்புபட்ட அனைத்து ஊழியர்கள் பற்றிய விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அதிகாரிகள், தவறு இழைப்பவர்களே விசாரணைக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் தெரிவித்தனர்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...