விசேட நீதிமன்று கோட்டாபயவுக்கு வெளிநாடு செல்ல தடை | தினகரன்

விசேட நீதிமன்று கோட்டாபயவுக்கு வெளிநாடு செல்ல தடை

நிதி மோசடி குற்றச்சாட்டு

மக்கள் பணத்தை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு பாரிய மோசடிகள் தொடர்பான விசேட மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட முதலாவது நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான சம்பத் அபயக்கோன், சம்பத் விஜயரட்ன மற்றும் சம்பா ஜானகி ஜயரட்ன ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

33.9 மில்லின் ரூபா பொது மக்கள் நிதியை மோசடியாகப் பயன்படுத்தி மெதமுலனவில் டீ.ஏ.ராஜபக்‌ஷ நினைவுத்தூபி மற்றும் நூதனசாலை ஆகியவற்றை அமைத்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உட்பட ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்றையதினம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நேற்றையதினம் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். சந்தேகநபர்கள் ஏழு பேருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், ஒரு மில்லியன் ரூபா இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது. இவர்களுடைய கடவுச் சீட்டுக்களும் நீதிமன்றத்தால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டன.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன், காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்சன டி சில்வா, முன்னாள் பொது முகாமையாளர் பத்ரா உதுலாவத்தி கமலதாச மற்றும் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சுதம்மிக்கா கெமிந்த ஆர்டிகல, சமன் குமார ஆப்ரஹாம் கலபத்தி, தேவகே மஹிந்த சாலிய மற்றும் சிறிமதி மல்லிகா குமாரி சேனாதீர ஆகியோரே கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பணத்தை மோசடி செய்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜரான சந்தேக நபர்களிடம் நீதிமன்ற வளாகத்திலுள்ள பொலிஸ் பிரிவினர் கைவிரல் அடையாளங்களைப் பெற்றுக் கொண்டனர்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ், குற்றப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களுக்கான ஆவணங்களை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். கூடிய விரைவில் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

குற்றவியல் சட்டக்கோவையின் 195 பிரிவின் கீழ் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் தீர்மானித்தது. இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மெதமுலன வீரகெட்டிய பகுதியில் டீ.ஏ ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லையென்றும் காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துடன் எந்தவித சட்டரீதியான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடவில்லையென்றும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்குக்கு ஆதாரமாக சட்டமா அதிபர் 105 ஆவணங்களையும் சாட்சியாளர்களாக 80 தனிநபர்களையும் பெயரிட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னரே சட்டமா அதிபர் இது தொடர்பான வழக்கை விசேட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

நமது நிருபர்


Add new comment

Or log in with...