உலகப் பொருளாதார மாநாடு இன்று வியட்நாமில் ஆரம்பம் | தினகரன்

உலகப் பொருளாதார மாநாடு இன்று வியட்நாமில் ஆரம்பம்

வியட்நாம் ஹெனோய் நகரில் நடைபெறவுள்ள “ஆசியான்” உலகப் பொருளாதார மகாநாட்டில் கலந்துகொள்ள நேற்று வியட்நாம் சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை 'நொய் பாய்' சர்வதேச விமான நிலையத்தில் வியட்நாமின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு நடவடிக்கைகள் பதில் அமைச்சர் கியென் மான் ஹன் வரவேற்ற போது பிடிக்கப்பட்ட படம்.

தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உலகப் பொருளாதார மாநாடு இன்று வியட்நாமில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை வியட்நாம் தலைநகர் ஹனோய் வந்தடைந்தார்.

இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த உலக பொருளாதார மாநாட்டில், தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றி விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் 50 ஆவது ஆண்டு விழாவின்போது, நான்காவது கைத்தொழில் புரட்சியின் போது தென்கிழக்காசிய நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்த நாடுகளில் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் நாளொன்றுக்கு 11 ஆயிரம் ஊழியர்களைப் பணியில் அமர்த்துவது பற்றியும் இதன்போது ஏற்படுகின்ற சிக்கல்களைத் தீர்த்து வைப்பது எவ்வாறு என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே உலகப் பொருளாதார மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் கிழக்காசிய நாடுகளுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளைப் பேணி வருகின்ற இலங்கை இதில் பங்குபற்றுவது முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாடுகளுடன் தற்போது இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தி பொருளாதார உறவை வலுப்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறது.

சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

1967 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து ஆசியான் அமைப்பை உருவாக்கின. அதனைத் தொடர்ந்து புரூனை, வியட்நாம், லாவோஸ், மியான்மார், கம்போடியா ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.

வியட்நாமில் இருந்து விசு கருணாநிதி


Add new comment

Or log in with...